ISRO Launches Military Communication Satellite GSAT-7A: இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்- 7A வுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’ - F11 ராக்கெட் இன்று மாலை 4.10 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக ஜிசாட்- 7A என்ற செயற்கைகோளை வடிவமைத்தது.
இதனை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.10 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- F11 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணுக்கு செலுத்தியது.
இதனைத் தொடர்ந்து, ராக்கெட்டில் உள்ள உந்துசக்தி மூலம், புவி சுற்றுவட்டப் பாதைக்கு செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
ஜிசாட்- 7ஏ செயற்கைக்கோள், பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வர இருக்கிறது.
இந்த செயற்கைக்கோள், விமானப் படைக்கு நிலப்பகுதியில் உள்ள கண்காணிப்பு நிலையங்களை தொடர்புகொள்வதற்கு வழிவகை செய்யும். விமானங்களுக்கு எச்சரிக்கை செய்வது எளிதாகும். மேலும், சர்வதேச அளவில் செயல்படுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 14-ம் தேதி ஜிசாட்-29 செயற்கைக்கோளும், கடந்த 5-ம் தேதி ஜிசாட்-11 செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 35 நாட்களில் மூன்றாவது செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.