நடுத்தர வர்க்கத்தினர் உபயோகிக்கும் சுமார் 88 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது.
குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின், சிறிய திரை கொண்ட தொலைக்காட்சி ஆகியவற்றின் ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டிருக்கிறது. நேற்று 28வது ஜிஎஸ்டி கவுன்சிலின் மீட்டிங் நடைபெற்றது.
இந்த கவுன்சிலில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் “நடுத்தர வர்க்கத்தினரின் நிலையை புரிந்து கொண்டு நிறைய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது என்றும் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்” என்று கூறினார்.
பண மதிப்பிழக்கத்தினை தொடர்ந்து நிறைய பொருட்களின் விற்பனை மிகவும் குறைந்துவிட்டது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டால், இந்த பொருட்களின் விற்பனை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்பிற்கு பலர் ஆதரவினையும் எதிர்ப்பினையும் தெரிவித்துள்ளனர். கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசாக் குறிப்பிடுகையில் ”விலைவாசி மற்றும் வரி குறைக்கப்பட்டால் வருவாய் அதிகரிக்கும் என்று கூறுவது மிகவும் பெரிய பொய்” என்று குறிப்பிட்டார்.
விலைவாசி மற்றும் வரி குறைக்கப்பட்டால் வருவாய் அதிகரிக்கும் என்றால் அத்தியாவசிய பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரியினை முற்றிலுமாக நீக்கியிருக்கலாமே என்றும் கூறினார் தாமஸ்.
வாக்கம் க்ளீனர், ஹேர் ட்ரையர்ஸ், பெயின்ட்ஸ், வார்னிஷஸ், வாட்டர் கலர்ஸ், வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்ட 28% வரியை 18% குறைத்திருக்கிறார்கள்.
தங்கும் இடம் மீதான வரியினையும் மாற்றியிருக்கிறது கவுன்சில். ஹோட்டலில் தங்குவதற்கான கட்டணம் 7500 ரூபாக்கு மேலாக இருந்தால் அதற்கான வரி 28% மற்றும் 2500 - 7500க்கும் இடைப்பட்ட கட்டணத்திற்கு 18% மற்றும் ரூ. 1000 - ரூ. 2500க்கும் இடைபப்ட்ட கட்டணத்திற்கு சுமார் 12% என வரி அமைப்பை மாற்றி இருக்கிறது.