கொரோனா தொடர்பான பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொடர்பான பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க பல்வேறு மாநிலங்களும் கோரிக்கை விடுத்து வந்தன. உள்நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. அதேபோல், கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றிற்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. எனவே இதுபோன்ற கொரோனா தொடர்பான மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என்று பல மாநிலங்களும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில், கடந்த மாதம் 28 ஆம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரி விலக்கு அல்லது குறைப்பு தொடர்பாக பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இதுகுறித்து ஆய்வு செய்து பரிந்துரைப்பதற்காக அமைச்சர்கள் குழு ஒன்றை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது. அந்த குழு, கடந்த 7ஆம் தேதி தனது அறிக்கையை கவுன்சிலிடம் சமர்ப்பித்தது.
அதன்பிறகு இன்று, கொரோனா பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு தொடர்பாக முடிவு செய்ய, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காணொலி காட்சி மூலம் கலந்துக் கொண்டார்.
தடுப்பூசிகள் மற்றும் பிற கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான வரி குறித்த அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதித்துள்ளது. அதன்படி கொரோனா தொடர்பான பொருட்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் வரை நிவாரணம் வழங்கப்படும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விலக்கு அல்லது குறைப்பு விவரங்கள்
கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நோய் எதிர்ப்பு சக்திக்கு பயன்படுத்தப்படும் "டொசிலிசுமாப்" மருந்துக்கு 5% ஜிஎஸ்டி வரி வசூல் செய்த நிலையில் தற்போது அதற்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆனால் கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆக தொடர்கிறது. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ரெம்டெசிவர் மருந்துக்கான ஜிஎஸ்டி வரி 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ரத்தம் உறைதல் தொடர்பான சிகிச்சைக்குரிய ஹெப்பாரின் மருந்துக்கு ஜிஎஸ்டி வரி 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தால் கொரோனாவுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 5% என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ ஆக்சிஜனுக்கு 12% ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்ட நிலையில் அது தற்போது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள், வென்டிலேட்டர், வென்டிலேட்டர் மாஸ்க், பிபாப் மெஷின் உள்ளிட்டவற்றிக்கான ஜிஎஸ்டி வரி 12%-ல் இருந்து 5% ஆக குறிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கொரோனா பரிசோதனை கருவிகள் மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சானிடைசர்கள் , உடல்வெப்ப பரிசோதனை கருவிகளுக்கான 18% ஜிஎஸ்டி வரி என்பது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. தகன எரிவாயு , மின்சார தகனம் உள்ளிட்டவற்றிக்கு 18% ஜிஎஸ்டி வரியில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28%-ல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.