குஜராத்தில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில், அம்மாநிலத்தில் தலித் மக்களுக்காக போராடிவரும் ஜிக்னேஷ் மேவானி சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றார்.
ஜிக்னேஷ் மேவானி வட்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார். இதனால், காங்கிரஸ் தங்கள் கட்சி சார்பில் அத்தொகுதியில் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால், அத்தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜய்குமார் ஹர்காபாய் மற்றும் ஜிக்னேஷ் மேவானி இருவருக்கும் இடையே மட்டுமே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில், ஜிக்னேஷ் மேவானி 63,471 வாக்குகள் பெற்று வட்கம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஜிக்னேஷ் மேவானியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் விஜய்குமார் 42,479 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
35 வயதான ஜிக்னேஷ் மேவானி, கடந்த 2016-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் உனாவில் தலித்துகளுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்திற்கு நீதிகோரி ஆசாதி கூச் எனும் சுதந்திரமான நடைபயணம் என்ற பெரும் பேரணியை நடத்தினார்.
கடந்த 14-ஆம் தேதி குஜராத்தில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியானபோது, “கருத்துகணிப்புகள் முட்டாள்தனமானது. இம்முறை குஜராத்தில் பாஜக ஆட்சியமைக்காது”, என ஜிக்னேஷ் மேவானி கூறியிருந்தார்.
குஜராத்தில் பாஜக வெற்றிபெற்றாலும், ஜிக்னேஷ் மேவானியின் வெற்றி முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஜிக்னேஷ் மேவானியின் வெற்றி பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னோக்கி செலுத்தும் என, இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.