குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில், 70 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர்களை முதல்கட்டமாக பாஜக அறிவித்துள்ளது.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், 182 தொகுதிகள் அடங்கிய குஜராத் சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக 70 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை பாஜக இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தது.
இந்த வேட்பாளர்கள் தேர்வுக்கான கூட்டம் கடந்த புதன் கிழமை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மேற்கு ராஜ்கோட் தொகுதியிலும், துணை முதலமைச்சர் நிதின்பாய் படேல் மெஹ்சானா தொகுதியிலும், குஜராத் மாநில பாஜக தலைவர் ஜிதுபாய் வகானி மேற்கு பாவ்நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
அனைத்து சமுதாயத்தினருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில பாஜக தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.