குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையின் காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் இன்று (நவம்பர் 3) தேர்தல் ஆணையர்கள் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசுகையில், குஜராத்தில் மொத்தம் 4.90 கோடி வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக 4.8 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மாநிலம் முழுவதும் 51,782 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்.
Advertisment
குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல் கட்டமாக டிசம்பர் 1-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக டிசம்பர் 5-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 1-ம் தேதி 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ம் தேதி 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முதல் கட்ட தேர்தல்
வேட்பு மனுத் தாக்கல் - நவம்பர் 5 வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள் - நவம்பர் 14 வேட்பு மனு பரிசீலனை - நவம்பர் 15 வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் - நவம்பர் 17 வாக்குப்பதிவு - டிசம்பர் 1
இரண்டாம் கட்ட தேர்தல்
வேட்பு மனுத் தாக்கல் - நவம்பர் 10 வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள் - நவம்பர் 17 வேட்பு மனு பரிசீலனை - நவம்பர் 18 வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் - நவம்பர் 21 வாக்குப்பதிவு - டிசம்பர் 5
இரு கட்டங்களாக பதிவான வாக்குகளும் டிசம்பர் 8-ம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தொங்கு பாலம் விபத்து
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற தொங்கு பாலம் விபத்து குறித்து எதிர்கட்சிகள் ஆளும் பா.ஜ.க அரசை கடுமையாக சாடி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil