தண்ணீர் பிரச்னையை தீர்க்க கோரி போராட்டம் நடத்தியபோது நடந்த தாக்குதலுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பா.ஜ. எம்.எல்.ஏ. மன்னிப்பு கேட்டார். அதை ஏற்ற அந்தப்பெண், எம்,எல்.ஏ.வுக்கு ராக்கி கட்டினார்.
குஜராத் மாநிலம் குபேர்நகர் பகுதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் நீத்து தேஜ்வானி. குபேர் நகர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வரவில்லை. இதனால் அங்கு இயங்கிவரும் சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. மாயா சினிமாஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுக்கு தங்குதடையின்றி நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து, அப்பகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் நீத்து தேஜ்வானி தலைமையில் பெண்கள் சிலர், பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. பல்ராம் தவானி வீட்டு முன் போராட்டம் நடத்தினர்.
பல்ராம் தவானியின் ஆதரவாளர்கள், அப்பெண்கள் மீது தாக்குதல் நடத்தியநிலையில், அங்கு வந்த எம்.எல்.ஏ.தவானியும் நீத்து தேஜ்வானியை காலால் எட்டி உதைத்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. நீத்து தேஜ்வானி, சிகிச்சைக்காக, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பா.ஜ. எம்.எல்.ஏ.வின் இந்த செயலுக்கு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
பெண் மீது எம்.எல்.ஏ. தாக்குதல் நடத்திய வீடியோ
மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ.
இந்நிலையில், நீத்து தேஜ்வானி சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்கு சென்ற எம்.எல்.ஏ. பல்ராம் தவானி, தேஜ்வானியிடம் கூறியதாவது, தான் வேண்டுமென்றே, காலால் எட்டி உதைக்கவில்லை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் யாரோ,ஒருவர் என் கழுத்தில் தாக்கினர். அதன்விளைவாக தான், கால் தேஜ்வானியின் மீது பட்டதேஒழிய, நானாக அந்த பெண் மீது தாக்குதல் நடத்தவில்லை. எனது செயல் தங்களை புண்படுத்தியிருந்தால், அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். தேஜ்வானி எனது சகோதரி என்று தவானி மேலும் கூறினார்.
அந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்ட தேஜ்வானி, எம்.எல்.ஏ. பல்ராம் தவானிக்கு ராக்கி கட்டினார். இந்த போட்டோ அனைத்து ஊடகங்களிலும் முதன்மை செய்தியாக மாறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.