குஜராத்தில் படேல் சமூகத்தினருக்காக போராடிவரும் ஹர்திக் படேலுக்கு எதிராக 5 வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இதனை ’பாஜகவின் மலிவான தந்திரம்’ என, பத்திதார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
படேல் சமூக மக்களின் இட ஒதுக்கீட்டுக்காக போராடிவரும் பத்திதார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பின் தலைவர் ஹர்திக் படேல், நடைபெற உள்ள குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அங்கு பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஹர்திக் படேல் பெண் ஒருவருடன் தனியாக இருப்பதுபோன்ற வீடியோ ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, பாஜக இழிவான அரசியல் செய்வதாக ஹர்திக் படேல் குற்றம்சாட்டினார். இதுபோன்று, ஏற்கனவே இரண்டு முறை ஹர்திக் படேல் இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகின.
இந்நிலையில், கடந்த புதன் கிழமையும் அதேபோன்ற 5 வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அதில், ஒரு வீடியோவில் ஒரு பெண் மற்றும் இரு ஆண்களுடன் ஹர்திக் படேல் தோற்றத்தில் இருப்பவர் உள்ளதுபோலவும், அதன்பின் இரண்டு ஆண்களும் அந்த அறையைவிட்டு வெளியேறிவிடுவது போன்றும் உள்ளது.
இதுகுறித்து எந்தவித கருத்தையும் ஹர்திக் படேல் தெரிவிக்கவில்லை. ஆனால், ஹர்திக் படேலின் அரசியல் பிரவேசத்தை குலைக்கும் விதமாக பாஜக செய்யும் மலிவான தந்திரம்தான் இது என, பத்திதார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த வீடியோக்கள் பாஜகவினரால் தயாரிக்கப்பட்டவை எனவும், அதில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
குஜராத் சட்டப்பேரவைக்கு நாளை (சனிக்கிழமை) முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வியாழக்கிழமையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.