”படேல் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருப்பது அரசியலமைப்பு ரீதியாக சாத்தியமற்றது”, என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Advertisment
குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
படேல் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, பத்திதார் அண்டோலன் அனாமத் சமிதி அமைப்பினர் போராடி வருகின்றனர். இந்நிலையில், தாங்லள் ஆட்சிக்கு வந்தால் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் தன் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அகமதாபாத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சிறப்பு பேட்டி அளித்தார். அதில், “பத்திதார் போராட்டம் ஒரு மாயையை உருவாக்கியுள்ளது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என காங்கிரஸ் கூறியிருப்பது அரசியலமைப்பு ரீதியாக சாத்தியமற்றது. பத்திதார் சமூக மக்களிடையே கடலளவு வேறுபாடு உள்ளது. இட ஒதுக்கீடு வழங்குவோம் என்கிற காங்கிரஸின் வாக்குறுதி நடைமுறை சாத்தியமில்லை.”, என தெரிவித்தார்.
மேலும், தங்கள் சமூக மக்களுக்காக குஜராத்தில் போராடிவரும் இளம் தலைவர்களான ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கூர், ஹர்திக் படேல் ஆகியோரின் போராட்டங்களை மதிப்பதாகவும், அவர்களின் பிரச்சனைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும் எனவும் அமித் ஷா கூறினார். “அவர்களின் போராட்டங்களை நாங்கள் புறந்தள்ளவில்லை. ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசியலமைப்பு ரீதியில் தீர்வு தென்படவில்லை. தீர்வை கண்டறிய எல்லோரும் விவாதிக்க வேண்டும். இது ஒரு நீண்ட செயல்முறை.”, என கூறினார்.
மேலும், காங்கிரஸ் சாதி ரீதியாக குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதாக அமித்ஷா குற்றம்சாட்டினார்.