குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், காங்கிரஸ் வகுத்துள்ள வெற்றி வியூகத்தை குலைப்பதற்காக, அம்மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். கடுமையான பிரச்சார யுக்திகளை உருவாக்கி அதற்கேற்ப பணியாற்றி வருகிறது.
Advertisment
குஜராத்தில் படேல் சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டுக்காக கடந்த 2 ஆண்டுகளாக போராடி வரும் ஹர்திக் படேல், உனாவில் தலித் போராட்டத்தை முன்னெடுத்த ஜிக்னேஷ் மேவானி, தாக்கூர் சமூக மக்களுக்காக போராடிவரும் அல்பேஷ் தாக்கூர் ஆகிய மூவரும் பாஜகவுக்கு எதிராக குஜராத் மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஜிக்னேஷ் மேவானி சமீபத்தில் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அல்பேஷ் தாக்கூர் காங்கிரஸ் கட்சிக்கு நேரடியாக ஆதரவளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த மூன்று சமூக தலைவர்களுக்கும் பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வருவது அக்கட்சிக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், ராகுல்காந்தியின் சுற்றுப்பயணம், கோவில்களுக்கு செல்வது போன்ற நடவடிக்கைகள் பாஜகவுக்கு எதிரானதாக மாறியுள்ளது.
இதனால், பாஜகவின் வெற்றியை தக்க வைக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 12 அணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்து சமூகத்தினரை சாதிவாரியாக பிரித்தாளும் கொள்கையை காங்கிரஸ் பின்பற்றி வருவதாக ஆர்.எஸ்.எஸ். குற்றம்சாட்டுகிறது. இதனால், இந்துக்களை ஒன்றிணைப்பது, அல்பேஷ் தாக்கூர், ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி ஆகியோரின் தாக்கத்தை குறைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் முதன்மையான வேலையாக உள்ளது.
Advertisment
Advertisements
அம்மாநில ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பிரதிநிதிகள், வாக்காளர்களை குறிப்பாக இளைஞர்களிடம் நேரடியாக பேசியும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளவர்கள், குஜராத் தேர்தல் குறித்து ஆலோசிக்க சிறப்பு கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். '‘Sandarbh’ என்ற வாட்ஸ் ஆப் குரூப்பை உருவாக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அதன்மூலம், வாக்காளர்களுக்கு ஊக்கமளிக்கும் மேற்கோள்களை அனுப்பி அவர்களது மனதை மாற்றும் முயற்சியிலும் இறங்க உள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பாஜகவுக்காக வீடு, வீடாக பிரச்சாரம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து தேர்தலில் வெற்றி காண நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் கனவு பலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.