தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு: ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை
குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கிரிமினல் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 7) வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Advertisment
நீதிபதி ஹேமந்த் பிரச்சக் வழங்கிய உத்தரவில், இவ்வழக்கில் முன்னதாக செஷன்ஸ் நீதிமன்றம் தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவு "நியாயமானது மற்றும் சட்டபூர்வமானது" என்று கூறினார். மேலும், ராகுல் காந்தி வி.டி. சாவர்க்கரின் பேரன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கு உள்பட 10 கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கிறார் என்பதையும் நீதிமன்றம் கணக்கில் கொள்கிறது என்று கூறினார்.
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி. மோடி குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது குஜராத் பா.ஜ.க எம்.எல்.ஏ பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இந்தாண்டு தொடக்கத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தார். அதைத் தொடர்ந்து அவரது மக்களவை எம்.பி பதவி பறிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்தி தண்டனைக்கு தடை விதிக்க மறுத்து ஜாமீன் வழங்கியது.
பின்னர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்தி மேல்முறையீடு மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இன்று விசாரணையில் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தால் ராகுல் மீண்டும் எம்.பி பதவியைப் பெற்றிருப்பார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“