குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் உள்ள தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடிந்து விழுந்ததில், 122 மேற்பட்டோர் உயிரிழந்ததாக பஞ்சாயத்து அமைச்சரும் உள்ளூர் எம்.எல்.ஏ.,வுமான பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக அறிவித்துள்ளார். ”முதல்வர் பூபேந்திர படேல் தனது மற்ற அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்துவிட்டு, நிலைமையைக் கண்காணிக்கவும், தற்போது நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மறுபரிசீலனை செய்யவும் மோர்பிக்கு செல்கிறார்,” என முதல்வர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
மாலை 6.40 மணியளவில் மோர்பி நகரை இரண்டாகப் பிரிக்கும் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் டஜன் கணக்கான மக்கள் இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. ஜூல்டோ பூல் (குலுக்கும் பாலம்) என்று அழைக்கப்படும் இந்த பாலம் முதலில் மோர்பியின் முன்னாள் சமஸ்தானத்தின் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது, மேலும் இது ஒரு முக்கிய சுற்றுலா தலமாக இருந்தது. பி.டி.ஐ அதிகாரிகளை மேற்கோளிட்டு, பாலத்தின் மீது நின்றவர்களின் எடையைத் தாங்க முடியாமல் பாலம் இடிந்து விழுந்தது, என தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும் காயமடைந்தவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்தார். பிரதமர் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் பேசியதாகவும், மீட்புப் பணிகளுக்காக குழுக்களை அவசரமாக அணிதிரட்ட வேண்டும் என்று கூறியதாகவும் பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்தது.
இந்த பாலம் மோர்பி நகராட்சிக்கு சொந்தமானது. இருப்பினும், நகராட்சி சில மாதங்களுக்கு முன்பு ஓரேவா குழுமத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, பாலத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பை 15 ஆண்டுகளுக்கு ஒப்படைத்தது.
“மேலும் தகவலுக்காக நாங்கள் காத்திருக்கும் வேளையில், முதல் பார்வையில், பாலத்தின் நடுப்பகுதியில் பலர் அதைத் திருப்ப முயன்றதால் பாலம் இடிந்து விழுந்தது,” என்று ஓரேவா குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அக்டோபர் 26 ஆம் தேதி குஜராத்தி புத்தாண்டு தினத்தன்று பாலத்தை பழுதுபார்த்த பிறகு அந்த நிறுவனம் பொதுமக்களுக்கு திறந்து விட்டது. ஆனால், இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
"பாலம் மோர்பி நகராட்சிக்கு சொந்தமானது, ஆனால் நாங்கள் அதை 15 ஆண்டுகளாக பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளுக்காக சில மாதங்களுக்கு முன்பு ஓரேவா குழுமத்திடம் ஒப்படைத்தோம். இருப்பினும், தனியார் நிறுவனம் எங்களுக்குத் தெரிவிக்காமல் பாலத்தை பார்வையாளர்களுக்குத் திறந்து விட்டது, எனவே, பாலத்தின் பாதுகாப்பு தணிக்கையை எங்களால் நடத்த முடியவில்லை, ”என்று மோர்பி நகராட்சியின் தலைமை அதிகாரி சந்தீப்சிங் ஜாலா கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil