குட்கா முறைகேடு வழக்கில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ-யை தொடர்ந்து அமலாக்கத் துறையும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. சென்னையில் குட்கா போன்ற போதைப் பொருள் விற்பனைக்கு அனுமதி அளிக்க சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் காவல் துறை டிஜிபி உள்ளிட்டோருக்கு 39 கோடி ரூபாய் லஞ்சம் அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், குட்கா முறைகேட்டில் அமலாக்கத் துறை நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ், பெயர் குறிப்பிடப்படாத மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னையில் குட்கா போதைப் பொருள் விற்பனையின் மூலம், வருவாய் ஈட்டியிருப்பதாக வருமானவரித் துறை மற்றும் ஜிஎஸ்டி நுண்ணறிவுப்பிரிவிடம் குட்கா உரிமையாளர் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்கு குறித்த ஆவணங்களை அளிக்குமாறு சிபிஐ, வருமானவரித் துறை, ஊழல் தடுப்புப் பிரிவு ஆகியவற்றுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.