இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக செயல்பட்டு வந்த ராஜீவ் குமார் பதவிக்காலம் இன்றுடன் (பிப்.18) நிறைவடையும் நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஞானேஷ் குமார் இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையர் ஆவார்.
இன்று (பிப்.18) ஓய்வு பெறவுள்ள ராஜீவ் குமாருக்குப் பதிலாக புதிய தலைமை தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுப்பதற்காக பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழு கூடிய சில மணி நேரங்களுக்குப் பிறகு ஞானேஷ் குமாரின் நியமனம் அறிவிக்கப்பட்டது.
ஐ.ஏ.எஸ்., பணியில் இருந்து ஓய்வு பெற்ற இரண்டு மாதங்களுக்குள், 2024 மார்ச் 14 அன்று, ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். மார்ச் 15 அன்று அவர் பதவியேற்றார், அடுத்த நாளே, இந்திய தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் அட்டவணையை அறிவித்தது.
கடந்த 11 மாதங்களில், ராஜீவ் குமார் மற்றும் சக தேர்தல் ஆணையர் டாக்டர் சுக்பீர் சிங் சந்து ஆகியோருடன் ஞானேஷ் குமார் ஆணையத்தின் ஒரு பகுதியாக இருந்தார். அப்போது மக்களவைத் தேர்தல், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல் சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றது.
தலைமை தேர்தல் ஆணையராக அவரது பதவிக்காலம் 2029 ஜனவரி 26 வரை நீடிக்க உள்ளதால் அடுத்து வரும் 20 சட்டமன்றத் தேர்தல்கள், 2027 இல் குடியரசுத் தலைவர் தேர்தல்கள் மற்றும் 2029 மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகும் ஆணையத்திற்கு அவர் தலைமை தாங்குவார்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
கேரள கேடரின் 1988-பேட்ச் அதிகாரியான ஞானேஷ்குமார், ஜனவரி 2024 இல் ஓய்வு பெறும் போது கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றினார். தனது தொழில் வாழ்க்கையில், நாடாளுமன்ற விவகார செயலாளர், இணை செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும், பாதுகாப்பு அமைச்சகத்தில் இணை செயலாளராகவும் பணியாற்றினார்.
கேரளாவில், பொதுப்பணித் துறை மற்றும் நிதித் துறை உட்பட பல துறைகளில் பணியாற்றினார். 2012 முதல் 2016 வரை டெல்லியில் உள்ள கேரள மாளிகையில் குடியுரிமை ஆணையராகவும் இருந்தார். 2018 முதல் 2021 வரை உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக இருந்த குமார், 2019 இல் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டபோது மற்றும் ஜம்மு-காஷ்மீர் லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபோது முக்கிய பங்கு வகித்தார்.
ஒரு அரசாங்கத்தால் இதுவரை கொண்டு வரப்பட்ட மிக ரகசியமான மசோதாக்களில் ஒன்றான ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை உருவாக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது மட்டுமல்லாமல், ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை அமைப்பதில் அவர் ஈடுபட்டார் என்பதிலிருந்தே அவர் மோடி அரசாங்கத்தின் முக்கிய நபராக பார்க்கப்படுவது தெரிகிறது.
கூட்டுறவு செயலாளராக இருந்த காலத்தில், பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (MSCS) (திருத்தம்) சட்டம், 2023, கூட்டுறவுத் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்டது.