ஞானவாபி மசூதியை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகக் குழு தாக்கல் செய்த மனு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “முஸ்லிம் சமுதாயம் அதை ஒப்புக்கொள்ள முன்வர வேண்டும். வரலாற்றுத் தவறு நடந்துள்ளது. அதற்கு ஒரு தீர்வை முன்மொழியுங்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் திங்கள்கிழமை (ஜூலை 31) ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “மசூதி என்று சொன்னால், அது சர்ச்சையை உருவாக்கும். மசூதிக்குள் திரிசூலம் இருக்கிறது.
ஜோதிர்லிங்கம் இருக்கிறது , தெய்வ சிலைகள் உள்ளன” என்றார்.
தொடர்ந்து, ஞானவாபி-காசி விஸ்வநாதர் கோவில் பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமா என்ற கேள்விக்கு ஆதித்யநாத் பதிலளித்தார்.
அப்போது, “இந்த விஷயுத்தில் முஸ்லிம் சமுதாயம் ஒரு முன்மொழிவுக்கு வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு வரலாற்றுத் தவறு நடந்துள்ளது. அந்தத் தவறுக்கு அவர்கள் தீர்வைக் கோருகிறார்கள்” என்றார்.
ஞானவாபி மசூதி இந்துக் கோவில் கட்டமைப்பின் மீது கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக தொல்லியல் துறைக்கு அறிவியல் பூர்வ ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து மசூதி நிர்வாக குழு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தொல்லியல் துறை ஆய்வு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. தறபோது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேலும், இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பிரிதிங்கர் திவாகர், உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை ஆய்வு நடத்தப்படாது என்றார். வழக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அயோத்திக்குப் பிறகு, காசியும் மதுராவும் சங்பரிவாரின் கோவில் நிகழ்ச்சி நிரலில் உள்ளன. கிருஷ்ணரின் ஜென்மஸ்தானம் என்று நம்பப்படும் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி உள்ளது. இது தொடர்பாகவும் வழக்குகள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“