Manish Sahu
ஞானவாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் பூஜை (பிரார்த்தனை) நடத்த அனுமதிக்கும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த குழு மசூதியின் பணிகளை கவனிக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Gyanvapi mosque: Allahabad HC dismisses plea challenging Varanasi court order to allow puja in southern cellar
ஜனவரி 31 அன்று, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தின் தெற்கு பாதாள அறையில் பூஜை நடத்த அனுமதி அளித்தது. அதே இரவில் தெற்கு பாதாள அறை திறக்கப்பட்டு ஒரு அர்ச்சகர் பூஜை செய்தார். ஆச்சார்யா வேத் வியாஸ் பீட் கோவிலின் தலைமை அர்ச்சகரான ஷைலேந்திர குமார் பதக் என்பவர் இந்த பூஜை நடத்துவது தொடர்பான மனுவை தாக்கல் செய்தார், தனது தாத்தா சோம்நாத் வியாஸும் ஒரு அர்ச்சகர், அவர் டிசம்பர் 1993 வரை வளாகத்தில் பிரார்த்தனை செய்தார் என்று மனுவில் கூறியிருந்தார்.
மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மசூதி கமிட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, உச்ச நீதிமன்றம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு குழுவைக் கேட்டுக் கொண்டது. வியாஸ் தெஹ்கானா (பாதாள அறை) மசூதி வளாகத்தின் ஒரு பகுதியாக அவர்களின் வசம் இருந்தது மற்றும் வியாஸ் குடும்பத்தினருக்கோ அல்லது வேறு எவருக்கோ தெஹ்கானாவிற்குள் வழிபட எந்த உரிமையும் இல்லை என்பது கமிட்டியின் நிலைப்பாடாக இருந்தது.
இந்து அர்ச்சகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின், “மசூதியின் தெற்கு பாதாள அறையில் பூஜை செய்ய அனுமதிக்கும் வாரணாசி மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது” என்று உறுதிப்படுத்தினார். முன்னதாக, பிப்ரவரி 16-ம் தேதி, இந்த வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பதக் தாக்கல் செய்த வழக்கில், மாவட்ட நீதிமன்றம் ஜனவரி 17 அன்று வாரணாசி மாவட்ட நீதிபதியை மசூதியின் தெற்கு பாதாள அறையின் ரிசீவராக நியமித்தது. ஜனவரி 25 அன்று, மசூதி வளாகத்தின் அறிவியல் ஆய்வு குறித்த இந்திய தொல்லியல் துறையின் (ASI) அறிக்கை மனுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, அந்த இடத்தில் தற்போதுள்ள கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பு அங்கு ஒரு இந்து கோவில் இருந்ததாக ஆய்வில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஐந்து பெண் பக்தர்களின் முந்தைய மனுவின் பேரில், நமாஸுக்கு முன் சடங்கு துடைக்க பயன்படுத்தப்படும் “வசுகானா” தடைசெய்யப்பட்டு, மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“