கர்நாடக முன்னாள் முதல் அமைச்சரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான ஹெச்.டி குமாரசாமி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
அப்போது, வாக்குப்பதிவு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் தனது எண்ணங்களைப் பகிர்ந்துக்கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கர்நாடக தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியுள்ளீர்கள். கள நிலவரத்தைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?
காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டின் மீதும் சாமானியர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இந்த இரு கட்சிகளும் மக்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டன. அவர்கள் மாற்றத்தை எதிர்நோக்குகின்றனர்.
ஜேடி(எஸ்) உள்ளிட்ட மூன்று முக்கிய கட்சிகளும் தேர்தலை முன்னிட்டு யாத்திரை நடத்தி வருகின்றன. உங்களது “பஞ்சரத்ன யாத்திரை”க்கு பொதுமக்களின் வரவேற்பு எப்படி இருந்தது?
அவர்கள் (ஆளும் பிஜேபி மற்றும் காங்கிரஸ்) யாத்திரைகளை எப்படி ஏற்பாடு செய்தார்கள் என்பதற்கும், நான் அதை எப்படிச் செய்கிறேன் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
அவர்கள் மாவட்டம் அல்லது தாலுகா தலைமையகத்தில் யாத்திரைகளை ஏற்பாடு செய்து, தங்கள் உரைகளை நிகழ்த்தி விட்டுச் செல்கிறார்கள்.
பஞ்சரத்ன யாத்திரையில், ஒரு நாளைக்கு ஒரு தொகுதிக்கு மட்டுமே செல்கிறோம். நான் 60-70 கிராமங்களை கடந்துள்ளேன். அவர்களின் உண்மையான பிரச்னைகளை அறிந்துள்ளேன்.
நீங்கள் ஏதேனும் ஆய்வுகளை மேற்கொண்டீர்களா? தனித்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் 120 இடங்களை (224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில்) வெல்லும் இலக்கை உங்களால் எட்ட முடியுமா?
2008க்குப் பிறகு நடந்த மற்ற தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, இந்த முறை நிறைய வித்தியாசம் இருக்கிறது. மக்கள் எங்களுக்கு வாக்களிக்க விரும்புகிறார்கள்.
முதல்வர் வேட்பாளர்கள் என்று வரும்போது, மற்றவர்களை ஒப்பிடும்போது நான்தான் தரவரிசையில் முன்னிலை வகிக்கிறேன்.
சில தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாஜகவை விட JD(S) முன்னிலை பெற்றுள்ளது. முன்பு 15-20 இடங்களை தாண்ட மாட்டோம் என்று இரு கட்சிகளும் எங்களை கேலி செய்து வந்தனர்.
தற்போது 45-50 தொகுதிகளை பிடிப்போம் என்கிறார்கள். தற்போது பஞ்சரத்ன யாத்திரை 78 தொகுதிகளுக்கு சென்றுள்ளது. இதில் 60 தொகுதிகளில் எங்களால் வெற்றி பெற முடியும்.
உங்கள் தேர்தல் யுக்தி என்ன?
எங்களின் உண்மையான பலம் 70-80 இடங்கள். கடந்த மூன்று தேர்தல்களிலும் 224 தொகுதிகளிலும் வெற்றி பெற முயற்சித்தோம். இதனால் தோல்வியுற்றோம்.
நாங்கள் அதை பகுப்பாய்வு செய்து, 224 இடங்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பதை உணர்ந்துள்ளோம்.
தேர்தலில் வெற்றி பெறும் என்ற காங்கிரசின் நம்பிக்கை பற்றி என்ன கூறுகிறீர்கள்?
காங்கிரஸின் பலம் என்ன? 1994 ஆம் ஆண்டு ஐந்து வருட ஆட்சிக்குப் பிறகு காங்கிரஸ் 38 இடங்களாகக் குறைக்கப்பட்டது. அப்போது பாஜகவுக்கு 40 இருந்தது. 1999ல் ஜனதா தளம் பிரிந்தது காங்கிரசுக்கு சாதகமாக அமைந்தது.
அவர்கள் 120 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று கூறுவது போலியானது. 70-80 இடங்கள் வரலாம்.
கே சந்திர சேகர் ராவ்வின் பாரத் ராஷ்ட்ரீய சமிதி ஆதரவு, வேட்பாளர்களை நிறுத்துவார்களா?
அவர்கள் தெலங்கானாவில் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். இங்கு வேட்பாளரை நிறுத்த வாய்ப்பில்லை.
இவ்வாறு தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் ஹெச்.டி. குமாரசாமி பல்வேறு அரசியல் விஷயங்கள் குறித்து பகிர்ந்துக் கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/