கர்நாடகா மற்றும் ஹரியானாவில் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் H3N2 துணை வகை பாதித்த இரு நோயாளிகள் உயிரிழந்தனர். இந்நிலையில், அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு தயார்நிலை குறித்து விவாதிக்க மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
இதையடுத்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை மாநிலங்களுக்கு ஒரு ஆலோசனையை வழங்கியது.
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஒரு ட்வீட்டில், “இந்திய அரசாங்கம் மாநிலங்களுடன் இணைந்து செயல்பட்டு பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தரவுகளின்படி, ஜனவரியில் 1,245, பிப்ரவரியில் 1,307 மற்றும் மார்ச் மாதத்தில் 486 என மார்ச் 9 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 3,038 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
2022 இல் 13,202 உறுதிப்படுத்தப்பட்ட காய்ச்சல் பாதிப்புகள் இருந்தன.
கர்நாடகாவில், ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஆலூர் தாலுகாவைச் சேர்ந்த ஹிரே கவுடா, மார்ச் 1 அன்று இறந்தார். உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 82 வயதான அவர், இருமல் மற்றும் சளி காரணமாக பிப்ரவரி 24 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு மார்ச் 3 அன்று வந்த ஆய்வக அறிக்கைகள், அவருக்கு H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தின.
ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 56 வயது நபர், ஜனவரி மாதம் ரோஹ்தக்கில் உள்ள PGIMS மருத்துவமனையில் சோதனை செய்தபோது அவருக்கு H3N2 தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது, இவர் பிப்ரவரி 8 அன்று வீட்டில் இறந்தார்.
H3N2 நோய்த்தொற்றுகளைக் கையாள்வதில் மாநிலத்தின் தயார்நிலை குறித்து ஊடகங்களிடம் பேசிய விஜ், மக்கள் பீதியடைய தேவையில்லை. ஹரியானாவில் இதுவரை 10 பேருக்கு இந்த நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
ஜிந்த் மாவட்டத்தில் ஒரு நோயாளி இறந்துள்ளார், ஆனால் அவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் நுரையீரல் புற்றுநோயால் இறந்தாரா அல்லது H3N2 நோய்த்தொற்றால் இறந்தாரா என்பதைக் கண்டறிய சுகாதாரத் துறைக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பு வலுவானது மற்றும் எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்க முழுமையாகத் தயாராக உள்ளது.
செண்டினல் மருத்துவமனைகள் முழுவதும் கடுமையான சுவாச நோய்களின் பாதிப்புகளைக் கண்காணிக்கும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் தரவு, இன்ஃப்ளூயன்ஸாவின் H3N2 துணை வகையின் பாதிப்புகள் அதிகரித்துள்ளன என்பதைக் காட்டுகிறது, இது கடந்த நான்கு வாரங்களில் பதிவான அனைத்து இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகளில் 77% ஆகும்.
இரண்டு முதல் நான்கு வாரங்கள் நீடிக்கும் தொடர் இருமல் காய்ச்சலின் முக்கிய அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும் பருவகால காய்ச்சல் பாதிப்புகள் மற்றும் H3N2 துணை வகையும் புதியதல்ல. ஆனால் இந்த ஆண்டு பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காண்கிறோம், இது பல காரணங்களால் இருக்கலாம் - மக்கள் இப்போது மாஸ்க் அணிவது இல்லை, இது கொரோனாவில் இருந்து மட்டுமல்ல, இன்ஃப்ளூயன்ஸா போன்ற பிற சுவாச நோய்த்தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கிறது, என்று புனே-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியின் மூத்த விஞ்ஞானி டாக்டர் பிரக்யா யாதவ் கூறினார்.
H3N2 நோயாளிகளில், 27% பேர் மூச்சுத் திணறலைப் புகாரளித்தனர், 16% பேர் நிமோனியாவின் மருத்துவ அறிகுறிகளைக் கொண்டிருந்தனர், 6% பேர் வலிப்புத்தாக்கங்களைக் கொண்டிருந்தனர். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தரவுகளின்படி, சுமார் 10% நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்பட்டது மற்றும் 7% ஐசியூ பராமரிப்பு தேவைப்படுகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கிய தகவல், மற்ற இன்ஃப்ளூயன்ஸா துணை வகைகளுடன் ஒப்பிடும்போது H3N2 துணை வகை அதிக மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு வழிவகுக்கிறது என்று கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“