Advertisment

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி?

நீண்ட காலமாக சிவசேனையின் கோட்டையாக கருதப்பட்டுவந்த ஒளரங்காபாத் மக்களவைத் தொகுதியை கடந்த 2019இஸ் மஜ்லிஸ் கைப்பற்றியது.

author-image
WebDesk
New Update
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி?

மகாராஷ்டிரத்தில் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது.
சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

Advertisment

ஹைதராபாத்துக்கு பிறகு மகாராஷ்டிரத்தில் தான் மஜ்லிஸ் கட்சிக்கு சில இடங்களில் வெற்றி கிடைத்தது.
பாஜக மற்றும் வகுப்புவாத சக்திகளை எதிர்கொள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இணையத் தயார் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஒருவேளை அப்படியொரு கூட்டணி அமைந்தால் சிவசேனை கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டியிருக்கும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடர்புகொண்டபோது அக்கட்சி இதனை மறுக்கவில்லை.

இதுகுறித்து மகாராஷ்டிர அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஒளரங்காபாத் எம்.பி.யுமான இம்தியாஸ் ஜலீல், இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பாஜகவின் பி டீம் நாங்கள் என்ற குற்றச்சாட்டை அதிகமுறை கேட்டுவிட்டோம். கடந்த வெள்ளிக்கிழமை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ் டோப் எனது வீட்டுக்கு வந்தார். எனது தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக அவர் வந்திருந்தார். அப்போது, உறுப்பினர் ஒருவர் மஜ்லிஸ் கட்சி பாஜகவின் வெற்றிக்கு உதவுவதாக குற்றம்சாட்டினார்.

அப்போது நான் உடனடியாக அனைவருக்கும் முன்னிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் நாங்கள் கூட்டணியில் சேர தயார் என்று அறிவித்தேன். இதை கேட்ட ராஜேஷ் டோப் அமைதியாகவே இருந்தார். இரு கட்சிகளின் தலைமையிடமிருந்து மஜ்லிஸ் கட்சியின் விருப்பத்துக்கு இன்னும் செவிசாய்க்கவில்லை.

நாங்கள் பாஜகவுக்கு உதவுகிறோம் என்று குற்றம்சாட்டுகிறார்களே. அவர்களின் உண்மையான சுயரூபத்தை பார்க்கவே நாங்கள் இத்தகைய விருப்பத்தை அறிவித்திருக்கிறோம். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுக்கு நாங்கள் வகுப்புவாத சக்திகள் என்றால், சிவசேனையுடன் கூட்டணியில் இருக்கும் அக்கட்சிகள் சிவசேனையை என்னவென்று கூறுவார்கள்.

மிகத் தீவிர வகுப்புவாத கட்சியான சிவசேனையுடன் நாங்கள் நிச்சயம் கூட்டணி வைக்க மாட்டோம். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் உடன் மட்டும் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம் என்றார்.

மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சரான ராஜேஷ் டோப் கூறுகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், அஜித் பவார் போன்ற மூத்த தலைவர்களுடன் விவாதித்த பிறகே இதுதொடர்பாக முடிவு எடுக்க முடியும் என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், நாடு முழுவதும் இதுபோன்ற நிலைப்பாட்டை மஜ்லிஸ் கட்சி எடுத்தால் மக்கள் அவர்களை நம்பத் தொடங்குவார்கள். அக்கட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஜலீல் இதுபோன்ற நேர்மறையான முடிவை எடுத்திருப்பதை நான் வரவேற்கிறேன்.

எனினும், இது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அவர்கள் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளின் சித்தாந்தத்துக்கு மஜ்லிஸ் கட்சியினர் ஒத்து வர வேண்டும். வகுப்புவாத கலவரம் வெடிக்காமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

ஒருவேளை மஜ்லிஸ் கட்சியுடன் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் கூட்டணி வைக்க உடன்பட்டால் அது பாஜகவுக்கு சாதகமாகவே அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

முஸ்லிம்களுக்கு ஆதரவான கட்சி காங்கிரஸ் என்று குற்றம்சாட்ட பாஜக தொடங்கிவிடும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். சுதந்திரத்துக்குப் பிறகு ஹைதராபாதை இந்தியாவுடன் ஒன்றிணைக்க வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் ரஸாகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் மஜ்ஸில் கட்சியினரை பாஜக எப்போதுமே ஒப்பிட்டு குற்றம்சாட்டி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, மஜ்லிஸ் கட்சியை குற்றம்சாட்டி வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் மஜ்லிஸ் கட்சி பகுஜன் சமாஜ் உடன் கூட்டணி வைக்க முயன்றது. எனினும், பகுஜன் சமாஜ் அக்கட்சியுடனான கூட்டணியை ஏற்கவில்லை.

தனித்தனியாக நாங்கள் போட்டியிடுவதால் வாக்குகள் சிதறி அது பாஜகவுக்கு சாதகமாகி விடுகிறது. கோவா சட்டசபை தேர்தலில் அப்படிதான் ஆகிவிட்டது என்று ஜலீல் கூறினார்.

சிவசேனை எம்.பி.யும் செய்தித்தொடர்பாளருமான சஞ்சய் ராவத் கூறுகையில், சத்ரபதி சிவாஜியை கொலை செய்த ஒளரங்கசீப் சமாதி முன் மண்டியிடுபவர்களுடன் நாங்கள் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்றார்.

மகாராஷ்டிராவில் மராத்வாடா பகுதியில் உள்ள நந்தேட் மாநகராட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு 11 இடங்களில் மஜ்லிஸ் கட்சி வென்றது.

இந்தப் பகுதியில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, மகாராஷ்டிரா பேரவைத் தேர்தலில் 2014இல் ஒளரங்காபாத் சென்ட்ரல், பைகுல்லா ஆகிய இரண்டு தொகுதிகளில் மஜ்லிஸ் வென்றது.

2014 மக்களவைத் தேர்தலில் 24 இடங்களில் போட்டியிட்டு 0.93 சதவீத வாக்குகளை பெற்றது மஜ்லிஸ்.
நீண்ட காலமாக சிவசேனையின் கோட்டையாக கருதப்பட்டுவந்த ஒளரங்காபாத் மக்களவைத் தொகுதியை கடந்த 2019இஸ் மஜ்லிஸ் கைப்பற்றியது.

இதையும் படியுங்கள்:ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை; கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்

அதே ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஒளரங்காபாத் மற்றும் பைகுல்லா தொகுதிகளில் தோல்வியைத் தழுவியபோதிலும், துலே, மாலேகான் தொகுதிகளில் மஜ்லிஸ் கட்சி வென்றது. மொத்தம் வாக்குகளில் 1.34 சதவீதத்தையும் அக்கட்சி கைப்பற்றியது.

உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வெற்றியை ருசித்துள்ளது மஜ்லிஸ். மகாராஷ்டிராவில் அடுத்து வரவுள்ள 15 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மும்பை, தாணே, புணே, நாசிக் ஆகிய நகரங்களில் முக்கியமான இடங்களை கைப்பற்றுவதை குறிக்கோளாக கொண்டு களமிறங்கியிருக்கிறது மஜ்லிஸ் கட்சி.

மும்பையில் 227 இடங்களில் 50 இல் மஜ்லிஸ் கட்சிக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிர அரசியல் அடுத்தது என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment