பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஹரியானாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் அம்மாநில முதல்வர் மனோகர் லால், தனது உரையை தமிழில் பேசி அசத்தியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் கடந்த 2010ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 40 வருடங்கள் தமிழ் மொழியே இரண்டாவது மொழியாக இருந்தது. 1975ம் ஆண்டு, ஹரியானா முதல்வராக பதவியேற்ற பன்சிலால், பஞ்சாப் மொழியை ஹரியானாவின் அதிகாரப் பூர்வ முதல் மொழியாக கொண்டு வரப்படுவதை தவிர்க்க, தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக அறிவித்தார். அப்போதிலிருந்து தமிழ் தான் ஹரியானாவின் இரண்டாவது மொழியாக இருந்து வந்தது.
அதன்பின், 2010ல் முதல்வராக பதவி வகித்த புபிந்தர் சிங் ஹூடா, தமிழ் மொழியை நீக்கி பஞ்சாபி மொழியை இரண்டாவது மொழியாக கொண்டு வந்தார். பிறகு, 2014ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, பாஜகவின் மனோஹர் லால் கட்டர் ஹரியானா முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், இந்தாண்டு ஹரியானாவில் நடந்த பொங்கல் கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்ட மனோஹர் லால், தமிழில் உரையாற்றி அசத்தினார். 'பொங்கல் வணக்கம்' என்று ஆரம்பித்து, தான் தமிழகத்தில் இருந்த காலங்களை நினைவு கூர்ந்து, பின்பு தமிழ் மொழி கற்றுக்கொண்டதை பற்றி விவரித்தார். பிறகு, தமிழில் முழு உரையையும் ஆற்றுகிறேன் என்று கூறி, முழு உரையையும் தமிழில் ஆற்றினார்.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”, என்ற திருக்குறளை கூறி உரையை ஆரம்பித்த முதல்வர் மனோஹர், "பொது மக்களுடன் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் பொங்கல் பண்டிகையை வெறும் தமிழர்களின் பண்டிகையாக பார்க்கவில்லை. இது மகர சங்கராந்தியாகவும், பிகுவாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளை தேசிய ஒருமைப்பாட்டையும், விவசாயத்தையும் போற்றும் நன்நாளாக பார்க்கிறேன். இந்த திருநாளில் தேசத்தின் ஆணிவேறான விவசாயிகளின் வாழ்வு மலர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வந்தாரை வாழ வைக்கும் நாடு தமிழ்நாடு. எனக்கு தமிழும் தமிழர்களும் புதிதில்லை. சிறு வயது முதலே தமிழ் நாட்டில் வாழ்ந்திருக்கிறேன். ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருகை தந்திருக்கும் அனைத்து தமிழ் மக்களையும் வரவேற்கிறேன். நமது பஞ்சகுலா நகரத்தை உருவாக்கியதில் தமிழ் மக்களின் பங்கை நன்கு அறிகிறேன்.
தமிழகத்தில் வெள்ளம் பாதித்த போதும், கஜா புயல் பாதித்த போதும் சரி, நீங்கள் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது. உங்களுடைய பணி மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துகள்" என்று உரையாற்றினார்.