Haryana CM Manohar lal khattar remark as dead rat: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக திங்கள் கிழமை ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் கூறிய கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இது பாஜகவின் பெண்கள் விரோதத்தைக் காட்டுகிறது என்றும் இதற்கு காவிக் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியும் மற்றும் துஷ்யந்த் சௌதாலாவின் ஜன்நாயக் ஜனதா கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஹரியானாவில் உள்ள கைதால் மாவட்டத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், காங்கிரஸ் கட்சி தலைமையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைப் பற்றி கடந்த வியாழக்கிழமை பேசினார். அப்போது அவர், “மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸின் தேசியத் தலைவர் கூறினார்: 'நான் தலைவராக தொடர விரும்பவில்லை… காங்கிரஸ் தலைமைக்கு வேறொருவரைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த நபர் காந்தி குடும்பத்தைச் சேராதவராக இருக்க வேண்டும் என்று அறிவித்து பப்பு ராஜினாமா செய்தார்... அவர்கள் கையில் விளக்குடன் தேடத் தொடங்கினார்கள். காந்தி குடும்பம் அல்லாதவரைத் தேடினார்கள்... மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர்கள் சோனியா காந்தியை தலைவராக ஆக்கினார்கள். அவர்கள் ஒரு மலையை தோண்டினார்கள். ஆனால், அதிலிருந்து என்ன வெளியே வந்தது என்றால் ஒரு செத்த எலி வந்தது. ஏனென்றால், அவர்களால், சோனியா, ராகுல் மற்றும் காந்தி குடும்பத்திற்கு அப்பால் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை” என்று கூறினார்.
ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் நேற்று கார்கோடாவில் நடைபெற்ற மற்றொரு பொதுக்கூட்டத்திலும் இதையே திரும்ப பேசினார்.
இந்த கருத்துக்களைக் கண்டித்து அகில இந்திய மகிலா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் தலைவருக்கு எதிரான கட்டாரின் கருத்துக்கள் இழிவானவை, கூட்டத்தில் பேசத்தகாதது. இது அவருடைய மற்றும் பாஜகவின் பெண்களை அவமரியாதை செய்யும் அணுகுமுறையின் தெளிவான பிரதிபலிப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி என்று சுஷ்மிதா தேவ் கூறினார். “விவாதத்தை மலினப்படுத்தி வேலையின்மை மற்றும் கடுமையான பொருளாதார மந்தநிலை போன்றவற்றைத் தவிர்த்து, உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகும். ஹரியானா இந்தியாவின் பாலியல் பலாத்கார தலைநகராக மாறியுள்ளது என்பதை யாராவது மறுக்க முடியுமா? ஆள் கடத்தல் மற்றும் கடத்தல் ஆகியவையும் அதிகரித்து வருகின்றன. ஹரியானா மக்களை குறிப்பாக பெண்களை மோசமாக பாதிக்கும் உண்மையான பிரச்சினைகளுக்கு ஹரியானா முதல்வரிடம் பதில்கள் இல்லை.” என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் அவர், பாஜகவின் ‘பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ’ (மகளைக் காப்பாற்றுங்கள்.. மகளுக்கு கற்றுக்கொடுங்கள்...) பிரச்சாரத்தையும் தோண்டி எடுத்து, நாட்டில் குற்ற விகிதத்தின் அடிப்படையில் ஹரியானா நான்காவது இடத்தைப் பிடித்திருப்பதாகக் கூறினார். “காவல்துறையில் மனிதவளத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் பற்றாக்குறை உள்ளது. ஹரியானாவில் 27 சதவீதம் பற்றாக்குறை உள்ளது. இந்த பற்றாக்குறை வட மாநிலங்களில் மிக அதிக அளவில் உள்ளது. மேலும், பஞ்சாப் காவல்துறையில் உள்ள மனிதவள பற்றாக்குறையை விட கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகம்” என்று அவர் கூறினார்.
“காங்கிரசில் நாங்கள் பொது வாழ்க்கையில் கண்ணியத்தை நிலைநிறுத்துவதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால், ஒரு பெண்ணாக, நான் இந்த அவமானகரமான கருத்துக்கு குற்றம் சாட்டுகிறேன். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க கோருகிறேன்.” என்று அவர் சுஷ்மிதா தேவ் குறிபிட்டுள்ளார்.
சுஷ்மிதா தேவ அவருடைய டுவிட்டர் பக்கத்தில், “முதலமைச்சரின் கருத்துக்கள் பொருத்தமற்றவை. அவர் மிகக் இழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், இது பாஜகவின் பெண்கள் விரோத தன்மையை காட்டுகிறது. அவரது கருத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.