scorecardresearch

‘கோவாக்சின்’ தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா: நிறுவனம் விளக்கம்

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த  கோவாக்சின் தடுப்பூசிகளுக்கான மனிதப் பரிசோதனையில் அனில் விஜ் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்

‘கோவாக்சின்’ தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா: நிறுவனம் விளக்கம்

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தனது  கோவாக்சின்  தடுப்பு மருந்தின் செயல்திறனை இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகு மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஹரியாணா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தனக்கு கொரோனா நோய்த் தொற்று  உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில்  இன்று தெரிவித்தார்.

 

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த  கோவாக்சின் தடுப்பூசிகளுக்கான மனிதப் பரிசோதனையில் அனில் விஜ் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவருக்கு, கோவாக்சின் தடுப்பு மருந்தில் முதல் டோஸ் வழங்கப்பட்டது.

 

 

“கோவாக்சின் மருத்துவ பரிசோதனைகள் இரண்டு டோஸ் அட்டவணையை அடிப்படையாகக் கொண்டவை. 28 நாட்கள் இடைவெளியில்  இரண்டு டோஸ்கள் வழங்கப்படும். இரண்டாவது டோஸ் நிவகித்த 14 நாட்களுக்குப் பிறகு தான் தடுப்பு மருந்து பலன் தரும். மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் அவர்களுக்கு முதல் டோஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது” என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 18 முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான 25,000  பேரிடம் கோவாக்சின் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.  ஹரியானாவில், மருத்துவ பரிசோதனைகளில்  அனில் விஜ் தன்னை முதல் நபராக இணைத்துக் கொண்டார்.

தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் இந்த தடுப்பூசியை உருவாக்கி வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் மூன்று தடுப்பு மருந்துகளில் இதுவும் ஒன்றாகும்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Haryana health minister anil vij who had been administered covaxin dose contracts covid 19

Best of Express