/indian-express-tamil/media/media_files/2025/05/17/IsRY7JLr1o1ahX7Sr3Jv.jpg)
ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்காக உளவு பார்த்ததாகக் கூறி 33 வயதான பயண வலைப்பதிவர் ஜோதி ராணி என்பவரை ஹரியானா காவல்துறையினர் நேற்று (மே 16), கைது செய்தனர்.
3,77,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட "டிராவல் வித் ஜோ" என்ற யூடியூப் சேனலையும், 1,32,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட இன்ஸ்டாகிராம் கணக்கையும் வைத்திருக்கும் ராணி, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் "முக்கிய தகவல்களை" பகிர்ந்ததாகக் கண்டறியப்பட்ட பின்னர் காவலில் எடுக்கப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஹிசார் மாவட்டத்தில் உள்ள நியூ அக்ரவால் எக்ஸ்டென்ஷன் பகுதியில் இருந்து ராணி கைது செய்யப்பட்டார். அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் பிரிவுகள் 3, 5 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 152 (இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்) ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இன்று (மே 17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். புலனாய்வு அமைப்புகளும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணியின் தந்தை ஹரிஷ் குமார் மல்ஹோத்ரா, ஹரியானா மின்சார வாரியத்தின் ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார். ராணி, குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஆனால் கோவிட்-19 தொற்றுநோயின் போது வேலையை விட்டுவிட்டு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பயண வலைப்பதிவராக மாறினார். மே 6-ஆம் தேதி ஹிசாரில் உள்ள தனது வீட்டில் இருந்து டெல்லிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கடைசியாக அவர் வெளியேறினார் என்று போலீசார் தெரிவித்தனர்.
அவர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகவும், தனது கண்டென்ட் மூலம் அந்த நாட்டை நேர்மறையாக சித்தரிக்க அங்குள்ள நபர்களுடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், ராணி தனது பாகிஸ்தான் பயணத்தின் வீடியோக்கள் மற்றும் ரீல்களை பதிவேற்றியிருந்தார்.
போலீசாரின் கூற்றுப்படி ஆரம்பகட்ட விசாரணையில், "2023 இல் விசிட்டர் விசாவைப் பெறுவதற்காக பாகிஸ்தான் தூதரகத்திற்கு அவர் சென்றதாக" கூறியதாக அறியப்படுகிறது. அப்போதுதான் அவர் புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான்-உர்-ரஹீம் என்கிற டேனிஷுடன் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அவர், அந்த அதிகாரியின் தொலைபேசி எண்ணை போலீசாருக்கு வழங்கியதாகவும், அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் கூறினார்.
ராணி, 2023 இல் தனது விசாவைப் பெற்று பின்னர் இரண்டு முறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
"டேனிஷின் வற்புறுத்தலின் பேரில், அவர் பாகிஸ்தானில் அலி அஹ்வான் என்ற நபரை சந்தித்தார். அங்கு அவரது பயணம் மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது. அலி ஷாகிர் மற்றும் ராணா ஷாபாஸ் என்ற இரண்டு பாகிஸ்தான் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் தன்னை தொடர்புபடுத்தியதாகவும் அவர் கூறினார். சந்தேகத்தைத் தவிர்க்க ஷாகிரின் மொபைல் எண்ணை தனது செல்போனில் ஜாட் ரந்தாவா என்று சேமித்து வைத்தார்," என ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
"அவர் சமூக ஊடக தளங்கள் மூலம் மூன்று பேருடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மற்றும் பல தொலைபேசி அழைப்புகள், செய்திகளை பரிமாறிக்கொண்டார். பின்னர் அவர் இந்தியாவின் முக்கியமான நிறுவல்களைப் பற்றிய தகவல்களை இந்த நபர்களுக்குப் பகிரத் தொடங்கினார். அவர் டேனிஷை தொடர்ந்து சந்தித்து வந்தார்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
போலீசாரின் கூற்றுப்படி, உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட டேனிஷ், பின்னர் மே 13 ஆம் தேதி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டார்.
இந்த வார தொடக்கத்தில் ஹரியானா போலீஸ், பானிபட்டில் இருந்து 24 வயது இளைஞர் ஒருவரை பாகிஸ்தானில் உள்ள பல நபர்களுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்ததாகக் கூறி கைது செய்தது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நௌமான் எலாஹி என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர் பானிபட்டில் உள்ள போர்வை நெசவு தொழிற்சாலையில் தனியார் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.