பிரிவினைக்கு காங்கிரசை குற்றம் சாட்டிய பாஜக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்டாடும் விளம்பரத்தில் இந்தியாவின் முதல் பிரதமரைக் குறிப்பிடாத கர்நாடக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டுகளை குற்றம் சாட்டியதோடு, கர்நாடகா அரசு விளம்பரத்தில் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இல்லாதது ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து கடுமையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. மேலும், பிரிவினையின் போது உயிர் இழந்தவர்களை ஆளும் கட்சி மதிக்கவில்லை என்றும் இந்தியாவின் முதல் பிரதமர் மீது வெறுப்பை வளர்த்து வருவதாகவும் குற்றம் சாட்டியது.
இரண்டாவது, பிரிவினை கொடும் நினைவு தினத்தன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்துள்ள பாஜக, “இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம், நாகரிகம், மதிப்புகள், யாத்திரைத் தலங்கள் பற்றி அறியாதவர்கள் நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த மக்களுக்கு இடையே மூன்று வாரங்களில் எல்லையை உருவாக்கினர். இந்த பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக போராடும் பொறுப்பை அந்த நேரத்தில் கொண்டிருந்த மக்கள் எங்கே இருந்தார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வீடியோ, அற்புதமான இசை மற்றும் பழைய வீடியோ காட்சிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ காங்கிரஸைக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த வீடியோ நிறைய காட்சிகள் நேரு மற்றும் முகமது அலி ஜின்னாவைக் காட்டுகிறது. மேலும், நாட்டைப் பிரிக்க அனுமதித்ததற்காக கம்யூனிஸ்டுகளையும் குற்றம் சாட்டுகிறது.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதற்கு பதிலளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “ஆகஸ்ட் 14 ஆம் தேதியை பிரிவினை பயங்கர நினைவு தினமாக கொண்டாடும் பிரதமரின் உண்மையான நோக்கம், மிகவும் அதிர்ச்சிகரமான வரலாற்று நிகழ்வுகளை தனது தற்போதைய அரசியல் போர்களுக்கு தீனியாக பயன்படுத்துகிறார்” என்று அவர் குற்றம் சாட்டினார். லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்து உயிர் இழந்தனர். அவர்களின் தியாகங்களை மறக்கவோ, அவமதிக்கவோ கூடாது என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இந்துத்துவா சித்தாந்தவாதியான விநாயக் தாமோதர் சாவர்க்கர் இரு தேசக் கோட்பாட்டை உருவாக்கினார், ஜின்னா அதை முழுமையாக்கினார் என்பதே உண்மை என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மேலும் கூறுகையில், “நாம் பிரிவினையை ஏற்கவில்லை என்றால், இந்தியா பல துண்டுகளாக பிரிந்து முற்றிலும் அழிந்துவிடும் என்று நான் உணர்ந்தேன்” என்று சர்தார் படேல் எழுதினார்.
மேலும் அவர் கூறுகையில், “தேசத்தை ஒன்றிணைக்கும் முயற்சியில் அயராத காந்தி, நேரு, படேல் மற்றும் பலரின் பாரம்பரியத்தை இந்திய தேசிய காங்கிரஸ் நிலைநிறுத்தும். வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “நான் பிரிவினையின்போது ஒரு டஜன் உறுப்பினர்களை இழந்த குடும்பத்தில் இருந்து வந்தவன். சங்-லீக் டூயட் ஒரு சூழ்நிலையை உருவாக்கியது, அது வெளிப்பட்ட நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது. தனது சித்தாந்த முன்னோர்களின் தவறான செயல்களுக்கு மன்னிப்பு கேட்பதன் மூலம் பிரதமர் சிறப்பாக செயல்படலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்ராம் ரமேஷின் ட்வீட்களுக்கு பதிலளிக்கும் விதமாக, பாஜக தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் ட்வீட் செய்துள்ளார், “பிரிவினையின் கொடூரங்களை நினைவில் கொள்ள ஏன் இவ்வளவு நேரம் எடுத்தது? உங்கள் பக்கம் இருந்த பல பிரதமர்கள் ஏன் அதைத் தவிர்த்தனர்? வரலாற்றுப் பக்கங்கள் ஏன் அதைத் தவறவிட்டன? உங்கள் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் மறைக்க பல விஷயங்கள் இருந்ததாலா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் அமித் மாளவியா, “காங்கிரஸால் அதன் முறைகேடுகளை மறைக்க முடியாது. பிரிவினையின் பயங்கரத்தை எதிர்கொள்ள முடியாது. அந்த சோகத்திற்கு அது மட்டுமே பொறுப்பு” என்றார். அவர் மேலும் கூறுகையில், “எங்கள் கடந்த காலத்தைப் புறக்கணிப்பது, சங்கடமாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமானம். பிரிவினையின் கொடூர நினைவு தினம் ஒற்றுமையுடன் நிற்கும் நாள்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக அரசின் விளம்பரம்
இதற்கிடையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலில் இருந்து நேருவை ஒதுக்கிய கர்நாடக அரசின் விளம்பரத்தைக் கண்டு காங்கிரஸ் கொந்தளித்துள்ளது. சுதந்திரத்திற்காக பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பை சிறப்பித்துக் காட்டும் விளம்பரத்தை மாநில தகவல் துறை மூலம் அரசாங்கம் வெளியிட்டது. இதில் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல், பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், மற்றும் வீர் சாவர்க்கர் ஆகியோர் 10 தேசிய சுதந்திரப் போராட்ட வீரர்களும், கர்நாடகத்தைச் சேர்ந்த 10 சுதந்திரப் போராட்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
“இன்றைய அரசு விளம்பரத்தில் பண்டிட் ஜவஹர்லால் நேருவை சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்டியலில் சேர்க்காதது, ஒரு முதல்வர் தனது நாற்காலியைக் காப்பாற்ற எவ்வளவு கீழ்நிலைக்குச் செல்கிறார் என்பதைக் காட்டுகிறது” என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா ட்வீட் செய்துள்ளார்.
சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில், “கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பண்டித நேருவை அவமதித்ததற்காக ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். தங்கள் நாட்டின் முதல் பிரதமரை அவமானப்படுத்துபவர்களை இந்தியா மற்றும் கர்நாடக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தன்னை சிறையில் இருந்து விடுவிக்குமாறு ஆங்கிலேய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்த சாவர்க்கர், முன் வரிசையில் இடம் பெறுகிறார். ஆனால், விளிம்புநிலை மக்களின் குரலாக இருந்து விடுதலைக்காகப் போராடிய பாபாசாகேப் கடைசி வரிசையில் வைக்கப்படுகிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், பழிவாங்கும் பிரச்சாரத்திற்காக பொது பணத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பாஜகவை தாக்கினார். “பண்டித ஜவஹர்லால் நேரு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஆங்கிலேயர்களால் 9 முறை கைது செய்யப்பட்டு 3,259 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நேருவின் பெயர் விளம்பரத்தில் விடுபட்டிருப்பது மன்னிக்க முடியாதது.” என்று விமர்சனம் செய்துள்ளர்.
இந்தியாவின் முதல் பிரதமர் & தேசத்தை கட்டியெழுப்பிய பண்டித ஜவஹர்லால் நேரு மீதான தீராத வெறுப்பு அதன் உச்சத்தை எட்டியுள்ளது.
காங்கிரஸின் ராஜ்யசபா எம்பி ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில், “இந்தியாவின் முதல் பிரதமரும், தேசத்தைக் கட்டியவருமான பண்டித ஜவஹர்லால் நேரு மீது தீராத வெறுப்பு உச்சத்தை எட்டியுள்ளது. பொம்மை அரசு தனது நிலையை மறுத்து கீழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்தௌ 75 வது ஆண்டு விழாவில், இது இன்றைய ஆட்சியாளர்களின் தன்மை மற்றும் தீய சிந்தனை செயல்முறையை பிரதிபலிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.