Jignasa Sinha
Hathras case: AMU doctor who questioned FSL report told to go : ஹத்ராஸ் பெண் வழக்கில் ஃபாரன்சிக் அறிக்கைக்கு மதிப்பே கிடையாது என்று இந்த மாத ஆரம்பத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பேட்டி அளித்த ஜவஹர்லால் நேரு மருத்துவமனை மருத்துவரை, இனிமேல் பணியாற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
மருத்துவர் அஸீம் மாலிக் மட்டுமின்றி ஒபைத் ஹக்கிற்கும் இதே போன்று மருத்துவமனை கடிதம் அனுப்பியுள்ளது. மருத்துவர் ஹக், அந்த பெண்ணின் மருத்துவ-சட்ட ரீதியான அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த தடயவியல் அறிக்கையின் அடிப்படையில் தான் சட்ட மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி. அந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகவில்லை என்று கூறியிருந்தார்.
அந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாக கூறப்பட்ட நாளில் இருந்து 11 நாட்கள் கழித்து தான் மாதிரிகள் பெறப்பட்டது. ஆனால் அரசு விதிமுறைகளோ, இது போன்ற வழக்கில் 96 மணி நேரத்திற்குள் மாதிரிகளை பெற வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே இந்த அறிக்கை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதை நிரூபிக்காது என்று கூறியிருந்தார் மருத்துவர் மாலிக்.
செவ்வாய் கிழமை காலையில் மருத்துவர்கள் மாலிக் மற்றும் ஹக் சி.எம்.ஒ. கையெழுத்திடப்பட்ட கடிதங்களை பெற்றுள்ளனர். “மதிப்பிற்குரிய துணை வேந்தர் மருத்துவர் தாரிக் மன்சூர் தொலைபேசி வாயிலாக 20.10.2020 அன்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஜெ.என்.எம்.சி.எச். மருத்துவமனையில் அவசரசிகிச்சை பிரிவில் மருத்துவ அதிகாரிகளாக பணியாற்ற வழங்கப்பட்ட பணிநியமனம் ரத்து செய்யப்படுகிறது. இனிமேல் நீங்கள் பணியாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்” என்று கூறப்பட்டிருந்தது.
AMU நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டபோது, “ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக எந்த மருத்துவரையும் மருத்துவமனை நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்யவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு, காலியிடங்கள் இருந்தன, தற்போதுள்ள சி.எம்.ஓக்கள் விடுப்பில் சென்றனர். அவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவசர தேவைக்காகவே டாக்டர் மாலிக் மற்றும் டாக்டர் ஹக் மருத்துவர்கள் இங்கு நியமிக்கப்பட்டனர். இப்போது சி.எம்.ஓக்கள் திரும்பி வந்துவிட்டதால், காலியிடங்கள் இல்லை, எனவே அவற்றின் சேவைகள் தேவையில்லை” என்று கூறியது.
AMU நிர்வாகம் “மருத்துவர்கள் இந்த முடிவில் மகிழ்ச்சியடையவில்லை என்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. அவர்களின் குறைகளை நாங்கள் கவனித்து வருகிறோம், அவர்களுக்கு மருத்துவமனையில் வேறு பிரிவுகளில் பணி வழங்க முயற்சித்து வருகின்றோம்” என்று அன்று மாலை மீண்டும் கூறியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
மாஸ் கம்யூனிகேசன் துறை பேராசிரியரும், ஏ.எம்.யு பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றும் ஷஃபேய் கித்வய் “ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததன் பெயரில் யாரையும் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யவில்லை. இந்த இரண்டு மருத்துவர்களும், இடைக்கால தேவைகளுக்காகவே நியமனம் செய்யப்பட்டனர். அவர்களின் பணிகாலம் அக்டோபர் 8ம் தேதியுடன் நிறைவுற்றது. இருப்பினும் அவர்கள் மருத்துவமனைக்கு வருகை புரிந்தனர். சில மருத்துவ சட்ட வழக்குகளில் கையெழுத்திட்டனர். சி.எம்.ஒ. அவர்களின் பணி நீட்டிப்பை பரிந்துரை செய்தால் அதனை பல்கலைக்கழகம் ஆலோசிக்கும்” என்று கூறினார்.
”எனக்கு கடைசியாக ஆகஸ்ட் மாதம் சம்பளம் வழங்கப்பட்டது. எங்களின் சீனியர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி எங்களை பணியில் அமர்த்தினார்கள். உடனடியாக பணியில் சேர வேண்டும் என்று அப்போது கூறினார்கள். நான் அறுவைசிகிச்சை பிரிவில் மேற்படிப்பு படித்து இந்த ஆண்டு தான் ஏ.எம்.யுவில் பட்டம் பெற்றேன். கொரோனா காலத்திலும் நான் இங்கு பணியாற்றினேன். எங்களின் வாழ்வை பணயம் வைத்து வேலை பார்த்தோம். மாலிக் ஊடகங்களில் பேசிய காரணத்திற்காகவும், நான் ஏதோ தகவலை கசியவிட்டுவிட்டேன் என்று நினைத்தும் தற்போது எங்களை பணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். நாங்கள் ஏன் இலக்காக்கப்பட்டோம் என்று எனைக்கு தெரியவில்லை. 3 நாட்களுக்கு முன்பு, என்னுடைய பணி நியமனம் ரத்து செய்யப்பட உள்ளது என்று கேள்விப்பட்டேன். இது வரையில், இது தொடர்பாக துணை வேந்தருக்கு கடிதம் ஏதும் எழுதவில்லை. நாங்கள் ஏதும் தவறு செய்யவில்லை. இது வேதனை அளிக்கிறது” என்று மருத்துவர் ஹக் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
டாக்டர் மாலிக்கிடம் பேசிய போது, அவருக்கும் கடந்த மாத சம்பளம் தரவில்லை என்று கூறினார். மேலும் தன்னுடைய தனிப்பட்ட கருத்தாக ஹத்ராஸ் வழக்கு குறித்து பேசியதை கண்டிக்கும் வகையில் தன்னுடை சீனியர்கள் திட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்பே என்னை திட்டினார்கள். ஆனால் அவர்கள் வேறேதும் கூறவில்லை. செப்டம்பர் மாத இறுதியில், நான் என்னுடைய பணி நீட்டிப்பிற்காக விண்ணப்பித்தேன். ஆனால் அதனை ஒரு மாதம் கழித்து நிராகரித்துள்ளனர். காரணங்கள் ஏதும் கூறாமலே எங்களை பணியில் இருந்து நீக்கியுள்ளனர் என்று கூறியுள்ளார் அவர்.
துணை வேந்தர் தாரிக் மற்றும் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஷாஹித் அலி சித்திக் இந்த விவகாரம் பற்றி தொடர்பு கொண்ட போது பதில் ஏதும் அளிக்கவில்லை. மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மருத்துவர், அனைத்து ஃபார்மலிட்டிகளும் முடிந்த பிறகு இந்த மருத்துவர்கள் தங்களின் சம்பளத்தை பெற்றுக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
செப்டம்பர் 14ம் தேதி அன்று நான்கு உயர்சாதி ஆண்களால் தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் என்று கூறப்படுகிறது. அவர் ஏ.எம்.யூ. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். 2 வார சிகிச்சை பெற்ற அவருக்கு செப்டம்பர் 22ம் தேதி சுயநினைவு ஏற்பட்டது. அந்த பெண் தனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தது என்று வாக்குமூலம் கொடுத்தார். அந்த பெண் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் செப்டம்பர் 29ம் தேதி மரணம் அடைந்தார்.