/tamil-ie/media/media_files/uploads/2020/10/New-Project-2020-10-04T173543.301.jpg)
உத்தரப் பிரதேசம் மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு முன்பு 19 வயது தலித் பெண் ஆதிக்க சாதி ஆண்களால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து மிருகத்தனமாக தாக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை செப்டம்பர் 29ம் தேதி உயிரிழந்தார். போலீசார் அவருடைய உடலை செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவு பெண்ணின் கிராமத்துக்கு எடுத்துவந்தனர். அப்போது, கடைசியாக தனது மகளின் உடலை வீட்டுக்கு ஒருமுறை எடுத்துச் செல்ல வேண்டும் என்று பெண்ணின் பெற்றோர்கள் கெஞ்சியதைப் பொருட்படுத்தாமல், அவர்களின் எதிர்ப்பை மீறி போலீசார் நள்ளிரவில் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக தகனம் செய்தனர்.
ஹத்ராஸில் தலித் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உ.பி. எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உ.பி. போலீஸ் ராகுல் காந்தியிடம் நடந்துகொண்ட முறைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து வலியை துயரத்தை பகிர்ந்துகொள்வதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று கூறினார். அதோடு, ராகுல் காந்தி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று (அக்டோபர் 3) ஹத்ராஸ் நோக்கி பயணம் செய்தனர். அவர்கள் உ.பி. எல்லையில் அம்மாநில போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 5 பேர் ஹத்ராஸ் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஹத்ராஸ் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
இதனால், ஹத்ராஸ் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட போலீசார், 17 போலீஸ் வாகனங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஹத்ராஸ் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. உத்தரப் பிரதேசம், ஹத்ராஸ் கிராமத்தில் சமாஜ்வாடி கட்சியினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சமாஜ்வாடி கட்சி, ராஷ்டீய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்றனர். இந்த கட்சியைச் சேர்ந்த 5 பேர் மட்டும் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். அப்போது, அங்கே திரண்டிருந்த சமாஜ்வாடி கட்சி, ராஷ்டீரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இது குறித்து ஹத்ராஸ் சப் டிவிஷன் மேஜிஸ்ட்ரேட் பிரகாஷ் மீனா, “கட்சி தொண்டர்கள் சிலர் பெண் போலீசாரிடம் தவறாக நடந்துகொண்டதாலும், பாதுகாப்பு தடுப்புகளை உடைத்ததாலும் லேசான தடியடி நடத்த வேண்டியிருந்தது.” என்று கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கட்சி பிரதிநிதிகள் 5 பேருக்கு மேல் கிராமத்துக்குள் அனுமதிக்க கூடாடு. சமாஜ்வாடி கட்சி, ராஷ்டீரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் 5 பேர் கிராமதிற்குள் செல்பவர்களின் பெயர்களின் பட்டியலுடன் வந்தார்கள். நாங்கள் அவர்களை கிராமத்திற்குள் செல்ல அனுமதித்தோம். கடைசியாக, அவர்களுடைய தொண்டர்கள், பெண் போலீசார்களிடம் தவறாக நடந்துகொள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து கல் எறிந்தார்கள். அதில், எங்களுடைய போலீஸ் ஒருவர் காயம் அடைந்தார். கூட்டத்தைக் கலைக்க லேசாக தடியடி பிரயோகிக்கப்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது” என்று பிரகாஷ் மீனா கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஹத்ராஸ் கிராமத்தில் உயர் சாதி ஆண்கள் கூட்டம் நடத்தியுள்ளனர். அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக உயர் சாதியைச் சேர்ந்த பல ஆண்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த குழுவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சமாஜ்வாடி கட்சி ஊழியர்கள், காவல்துறையினரால் லாதிசார்ஜ் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
ராஷ்டீரிய லோக் தளம் கட்சி தலைவர் ஜெயந்த் சௌதரி, ஹட்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை கொலையான பெண்ணின் சகோதரரை சந்தித்து ஆறுதல் கூறி பேசினார்.
இதனிடையே, ஹத்ராஸ் எஸ்.பி வினீத் ஜெய்ஸ்வால், கிராமத்தில் தலித் இளம் பெண் பாலியல் வன்கொடுமை தாக்குதல் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், ஹத்ராஸில் கொலையான பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ‘ஒய் பிரிவு பாதுகாப்பு’வழங்கக் கோருகிறேன். இல்லையென்றால், நான் அவர்களை எனது வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். அவர்கள் இங்கே பாதுகாப்பாக இல்லை. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்றும் சந்திரசேகர் ஆசாத் ஹத்ராஸ் கிராமத்தைப் பார்வையிடச் சென்றிருந்தபோது உத்தரபிரதேச காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.