செப்டம்பர் 14 ஆம் தேதிஉத்திரபிரேதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நான்கு உயர் சாதி ஆண்களால் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட 19 வயது தலித் பெண் புதுடெல்லி மருத்துவமனையில் இன்று பலியானார்.
முன்னதாக, நாக்கு வெட்டப்பட்ட நிலையில், முதுகெலும்பில் ஏற்பட்ட பலத்த காயங்களோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சைக்காக அலிகார் நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உடல் நிலை மோசமடைந்தை அடுத்து, கடைசியாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயல் வெளியில் வேலை செய்து வந்த பெண்ணை, வயலுக்கு இழுத்து சென்று படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம், கூட்டு கும்பல் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு உயர் சாதி ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் கடந்த செப்டம்பர் 23 அன்று வழங்கிய தகவல் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தீப், அவரது மாமா ரவி (35) மற்றும் அவர்களது நண்பர் லவ் குஷ் ஆகிய மூன்று பேரை அவர் அடையாளம் காட்டியிருந்தார்.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்தீப் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்கள் பகுதியில் உள்ள தலித் குடுமபங்களை எப்போதும் துன்புறுத்தி வந்ததாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
கிட்டத்தட்ட, 2 தசாப்தங்களுக்கு முன்னர், சந்தீப்பின் தாத்தா ஒரு சிறிய பிரச்சனைக்காக பலியான பெண்ணின் தாத்தாவைத் தாக்கியதற்காக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மூன்று மாத சிறைவாசம் அனுபவித்திருந்தார்.
19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் எங்களுக்குள் பெரிய மனக்கசப்பை உருவாக்கியுள்ளது. “அவர்கள் உயர் சாதியினர். எப்போதும் எங்களை பெயர் வைத்துதான் அழைப்பார்கள். நாங்கள் அவர்களை புறக்கணித்து வந்தோம். சந்தீப் அதிக மதுப் பழக்கம் கொண்டவர். அவர் அவ்வபோது பெண்களை துன்புறுத்தி வந்தார்.ஆனால் யாரும் புகார் அளிக்கவில்லை,”என்று பலியான பெண்ணின் சகோதரர் கூறினார்.
இதற்கிடையில், பலியான பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பிரவீன் குமார் தெரிவித்தார்.
பலியான பெண்ணின் குடும்பத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள தேசிய மகளிர் ஆணையம் (என்.சி.டபிள்யூ) உறுதி பூண்டுள்ளதாக அதன் தலைவர் ரேகா சர்மா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில் ,”ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை சந்திக்க இருக்கிறார். நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் மேற்கொள்வோம்” என்று தெரிவித்தார்.
இதுகருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி “ மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பெருமளவில் மோசமடைந்துள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. குற்றங்கள் அனைத்தும் வெளிப்படையாக நடக்கின்றது. பெண்களின் பாதுக்காப்பிற்கு முதல்வர் யோகி ஆதித்தியநாத் பொறுப்பேற்க வேண்டும், “என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் ‘வெட்கக்கேடானது’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். “ஹத்ராஸ் பெண்ணின் மரணம் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் வெட்கக்கேடானது. நமது நாட்டின் மகள்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி வருவது வருத்தமளிக்கிறது. அவர்களை, நம்மால் பாதுகாக்க முடியவில்லை. குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும், ”என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “உணர்வற்ற அரசாங்கத்தால் எந்த நம்பிக்கையும் இல்லை” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil