மலையாள செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் 41 வயதான டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மற்றும் 3 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறி தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாணவர்கள் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (சி.எஃப்.ஐ) உடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஆதிக்க சாதியைச் சேர்ந்த 4 ஆண்களால் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த தலித் பெண்ணின் உறவினர்களைச் சந்திப்பதற்காக, அவர்கள் 3 பேரும் ஹத்ராஸுக்குச் சென்று கொண்டிருந்தபோது, திங்கள்கிழமை பிற்பகல் மதுராவில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் உத்தரபிரதேச காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர்.
உ.பி. காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட பத்திரிகையாளர் azhimukham.com போன்ற மலையாள செய்தி வலைத்தளங்களுக்காக எழுதுகின்ற கேரள யூனியன் ஆஃப் ஒர்க் ஜர்னலிஸ்ட்ஸ் (கே.யு.டபிள்யூ.ஜே) செயலாளர், பத்திரிகையாளர் சித்திக் கப்பன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளர். தற்போது அவர் மதுரா போலீசாரின் தடுப்புக் காவலில் உள்ளார். கப்பனைத் தவிர, சி.எஃப்.ஐ அலுவலக பொறுப்பாளர்களான அதிக்-உர்-ரஹ்மான் மற்றும் மசூத் அகமது மற்றும் ஆலம் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
உபா சட்டம் (யு.ஏ.பி.ஏ) முதன்மையாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாகும் - இது தனிநபர்கள் மற்றும் சங்கங்களின் சில சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை கையாள்வதை நோக்கமாகக் கொண்டது ஆகும்.
சித்திக் கப்பன் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். ரஹ்மான் முசாபர்நகரைச் சேர்ந்தவர். அஹமத் பஹ்ரைச்சிலிருந்து வந்துள்ளார். ஆலம் ராம்பூரில் இருந்து வந்துள்ளார்.
விசாரணையின்போது, “அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க டெல்லியில் இருந்து ஹத்ராஸுக்கு பயணிப்பதாக கூறினார்கள். மேலும், குடும்பத்தின் குரலை வெளிப்படுத்தி அவர்களுக்கு நீதி வழங்க விரும்புவதாகக் கூறினார்கள்” என்று மதுராவில் உள்ள ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.
“திங்கள்கிழமை காலை மான்ட் சுங்கச் சாவடியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ஸ்விஃப்ட் டிசைர் காரின் வருகை சந்தேகத்திற்குரியதாக இருப்பதைக் கண்டோம். நாங்கள் அதில் இருந்த 4 நபர்களிடம் விசாரித்தோம். அவர்கள் குற்றவிசாரணைப் பிரிவு 151-இன் கீழ் தடுப்பு கைதுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் ஹத்ராஸை நோக்கி சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அவர்கள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறியது குறித்து விசாரித்து வருகிறோம் என்று மதுரா எஸ்.எஸ்.பி கவுரவ் குரோவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
மதுரா காவல்துறையினர் அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், தொலைபேசிகள் ஆகியவற்றில் இருந்து ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான செய்திகள் ஆவணங்களைக் கைப்பற்றியதாகக் கூறினர். அவை அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடும் என்று மதுரா காவல்துறையினர் கூறுகின்றனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய azhimukham.com என்ற செய்தி இணையதள ஆசிரியர் கே.என்.அசோக் கூறுகையில், “கப்பன் ஜனவரி முதல் டெல்லி-என்.சி.ஆரில் எங்களுக்காக எழுதுகிறார். திங்கள்கிழமை அவர் ஒரு செய்திக்காக ஹத்ராஸுக்குப் போவதாகக் கூறி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். அவருடன் வந்த 3 பேர் யார் என்று எனக்குத் தெரியாது. நேற்று மாலை அவரை அழைக்க முயற்சித்தோம். ஆனால், அவரை எங்களால் தொடர்பு கொள்ளமுடியவில்லை. பின்னர், அவர் மதுரா போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிந்தோம்” என்று கூறினார்.
உ.பி அரசு தடை செய்ய விரும்பும் அமைப்பா பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா?
மதியம் 2 மணியளவில் சுங்கச்சாவடியி கப்பன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கே.யு.டபிள்யூ.ஜே.யின் முன்னாள் செயலாளர் பத்திரிகையாளர் மணிகாந்தன் தெரிவித்தார். “கப்பன் இந்த ஆண்டு azhimukham.com-க்கு எழுதத் தொடங்கினார். அவருக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் (பி.எஃப்.ஐ) இந்தியா உடன் எந்த தொடர்பும் இல்லை. முன்னதாக, அவர் பி.எஃப்.ஐ பிரசார பத்திரிகையாக இருக்கும் தேஜாஸுக்கு எழுதுவார். அது நிதி நெருக்கடியால் 2018ல் மூடப்பட்டதால் அவர் வேலையை இழந்தார். பின்னர், அவர் ‘தல்சமயம்’ என்ற மற்றொரு செய்தித்தாளில் வேலை செய்யத் தொடங்கினார். அதுவும் கடந்த ஆண்டு மூடப்பட்டது” என்றார் மணிகாந்தன்.
இதனிடையே, கே.யு.டபிள்யூ.ஜே.யின் டெல்லி பிரிவு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கப்பன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்து கடிதம் எழுதியுள்ளார். “ஒரு பத்திரிகையாளரை சட்டவிரோதமாக தடுத்து வைத்ததற்கு எதிராக நாங்கள் உச்சநீதிமன்றத்தில் ஒரு ஹேபியாஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்துள்ளோம் ... நம் நாட்டின் அரசியலமைப்பு பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கிறது. கப்பனின் கைது அரசியலமைப்பு விழுமியங்களை மீறுவதாகும்” என்று யூனியனின் டெல்லி பிரிவு தெரிவித்துள்ளது.
கே.யு.டபிள்யூ.ஜே. தலைவர் மிஜி ஜோஸ் கையெழுத்திட்ட உ.பி. முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், “அவர்கே.யு.டபிள்யூ.ஜே.யின் செயலாளர்… மேலும் இப்பகுதியில் தற்போதைய சூழ்நிலையை செய்தியாக்க திங்கள்கிழமை காலை ஹத்ராஸுக்குச் சென்றிருந்தார்… ஹத்ராஸ் சுங்கச் சாவடியில் இருந்து அவர் உ.பி மாநில போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். அவரை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகளும் டெல்லியைச் சேர்ந்த சில வழக்கறிஞர்களும் எடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
பிரஸ் கிளப் ஆஃப் இந்தியாவும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. கப்பனை தாமதமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
பஹ்ரைச் கூடுதல் எஸ்.பி. கே. ஞானஜெய் சிங் கூறுகையில், “இளைஞர்கள் மசூத் அகமது (23) என அடையாளம் காணப்பட்டவர் ஜர்வால் வட்டாரத்தில் வசிப்பவர். பி.எஃப்.ஐ, சி.எஃப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ போன்ற அமைப்புகள் மத பதற்றத்தையும் கலவரங்களையும் தூண்ட சதி செய்தல், அமைதியை சீர்குலைத்தல் ஆகிய ஒத்த சித்தாந்தத்தில் செயல்படுகின்றன. இந்த நபர் மதுராவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்; கடந்த காலங்களிலும், அயோத்தியில் உள்ள ராம் ஜென்மபூமியில் பூமி பூஜையின் போது கலவரங்களைத் தொடங்க முயன்றதற்காக பி.எஃப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ உடன் தொடர்புடைய நபர்களை ஜர்வால் வட்டாரத்தில் நாங்கள் செய்துள்ளோம்.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.