உத்தரபிரதேசம் மாநிலம், ஹத்ராஸில் 4 ஆதிக்க சாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 19 வயது தலித் பெண்ணின் உடல் புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. குடும்பத்தினர் உயிரிழந்த பெண்ணின் உடலை கடைசியாக ஒருமுறை தங்கள் வீட்டுக்கு கொண்டுசெல்ல விரும்பியபோதும், போலீசார் தங்களை குடும்பத்தினருடன் வலுக்கட்டாயமாக இறுதிச் சடங்கை நடத்தி வைத்ததாக பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பலியான பெண்ணின் சகோதரர் புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “என் சகோதரி தகனம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது; காவல்துறை எங்களுக்கு எதுவும் சொல்லவில்லை. நாங்கள் கடைசியாக ஒரு முறை அவளது உடலை வீட்டிற்கு கொண்டுவர அனுமதிக்குமாறு அவர்களிடம் கெஞ்சினோம். ஆனால், அவர்கள் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை” என்று தெரிவித்தார்.
வயலில் தனது தாய்க்கு உதவியாக வேலை செய்துகொண்டிருந்தபோது ஆதிக்க சாதி ஆண்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கப்பட்ட அந்தப் பெண் 2 வாரங்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இறந்தார். நள்ளிரவில், அவரது உடல் ஆம்புலன்சில் ஹத்ராஸில் உள்ள அவருடைய கிராமத்துக்கு வந்தடைந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2020/09/New-Project-95-1-300x167.jpg)
நள்ளிரவு 1 மணியளவில், கிராமத்தில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர்களில் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “ஆம்புலன்ஸ் பிரதான சாலையில் உள்ளது; உடலை வீட்டிற்குள் கொண்டு செல்ல போலீசார் எங்களை அனுமதிக்கவில்லை. அவர்கள் சுடுகாட்டு மைதானத்தில் விளக்குகளை எரியவிட்டு இப்போதே அவரது இறுதி சடங்குகளை செய்யும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். நள்ளிரவில் அவளை தகனம் செய்ய நாங்கள் விரும்பவில்லை; நாங்கள் அவளது உடலை வீட்டிற்கு எடுத்துச்செல்ல விரும்புகிறோம்.” என்று கூறினார்.
அந்த நேரத்தில், தனது தந்தையும் சகோதரரும் டெல்லியில் இருந்து இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்று அவர் கூறினார். “என்ன அவசரம்? எங்கள் தந்தை இன்னும் வீட்டிற்கு வரவில்லை” என்று அவர் கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/09/New-Project-96-300x167.jpg)
2 மணி நேரம் கழித்து, அந்த கிராமத்திலிருந்து வெளியான வீடியோக்களும் புகைப்படங்களும் ஒரு பிணத்தை எரிக்கும் காட்சியைக் காட்டியது. தகனம் செய்யப்படும் இடத்திற்கு அருகில் பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை. அதிகாலை 3.30 மணியளவில், அவரது சகோதரர் கூறுகையில், “நாங்கள் எங்கள் சகோதரியின் உடலை தகனம் செய்ய மறுத்தபோது, போலீசார் ஆக்ரோஷமாகத் தொடங்கினார்கள். எனது உறவினர்கள் காவல்துறை என்ன செய்கிறார்கள் என்று பார்க்க முயன்றபோது, அவர்கள் எங்களை உதைத்து, எங்கள் உறவினரின் வளையல்களை உடைத்தனர். பயத்தால், நாங்கள் எங்களைப் பூட்டிக் கொண்டோம். அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அங்கேயிருந்து வெளியான வீடியோக்கள் மூலம், மகளின் உடலை கடைசியாக வீட்டிற்கு கொண்டுவர அனுமதிக்குமாறு அந்த பெண்ணின் தாய் போலீஸ் அதிகாரிகளிடம் கெஞ்சியது தெரிகிறது.
இதனிடையே, ஹத்ராஸின் இணை மாஜிஸ்திரேட் பிரேம் பிரகாஷ் மீனா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டுள்ளன. குற்றம் செய்தவர்கள் நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்துவதை காவல்துறையும் நிர்வாகமும் உறுதி செய்யும்.” என்று கூறினார்.
அதிகாலை 2.16 மணிக்கு, ஹத்ராஸ் காவல் துறை “குடும்பத்தின் விருப்பப்படி” தகனம் செய்யப்படும் என்று ட்வீட் செய்திருந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"