Mahender Singh Manral
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்த நாளில், நீதிபதியின் இல்லத்தில் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அவரது தொலைபேசி அழைப்புப் பதிவுகள் குறித்த விரிவான விவரங்களைக் கோரி டெல்லி உயர் நீதிமன்றம் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதாக தி சண்டே எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்குத் தெரிய வந்துள்ளது.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயின் அலுவலகத்திலிருந்து சனிக்கிழமை காலை டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோராவுக்கு ஒரு கடிதம் வந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆறு மாதங்களாக நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பணியாற்றிய டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) அதிகாரிகளின் விவரங்களைக் கோரி கடிதம் வந்தது. அந்தக் கடிதம் அதே காலகட்டத்திற்கான நீதிபதி வர்மாவின் அழைப்பு விவரப் பதிவு (CDR) மற்றும் இணைய நெறிமுறை விவரப் பதிவு (IPDR) தொடர்பான தகவல்களையும் கோரியது.
டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பதிவாளரும் செயலாளருமான நரேஷ் சந்த் கார்க் இந்தக் கோரிக்கையை விடுத்தார். இது தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டது.
தி சண்டே எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டபோது, “இந்த விஷயம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை,” என்று நரேஷ் சந்த் கார்க் கூறினார்.
பதிவாளர் கார்க்கின் கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பிரிவால் மதியம் 12:22 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறை டி.சி.பி மற்றும் 1வது பட்டாலியன் டி.சி.பி ஆகியோருக்கு ஒரு உள் தகவல் அனுப்பப்பட்டது. ஆதாரங்களின்படி, நீதிபதி வர்மாவின் கடந்த ஆறு மாத அழைப்பு விவரப் பதிவு, ஐகோர்ட் தலைமை நீதிபதி உபாத்யாயின் அலுவலகத்துடன் பகிரப்பட்டுள்ள நிலையில், அதே காலகட்டத்தில் அவரது இணைய நெறிமுறை விவரப் பதிவு தொடர்பான தகவல்களை காவல்துறை இன்னும் சேகரித்து வருகிறது.
“செப்டம்பர் 1, 2024 முதல் இன்றுவரை, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா வசிக்கும் துக்ளக் சாலையில் உள்ள 30 ஆம் எண் வீட்டுக்கு வழங்கப்பட்ட, நிலையான ஆயுதக் காவலர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் (CRPF) தளபதியின் பெயர், பதவி, பெல்ட் எண் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை, பாபு தாம் ரிசர்வ் இன்ஸ்பெக்டர் மூலம் உடனடியாக வழங்கவும், இணக்க அறிக்கையை இந்த அலுவலகத்திற்கும் அனுப்பலாம்,” என்று பாதுகாப்புப் பிரிவால் அலுவலக சுற்றுக்கு விடப்பட்ட உள் தகவல் தெரிவிக்கிறது.
பாதுகாப்புப் பிரிவால் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 14 அன்று தீ விபத்து தொடர்பான அழைப்பைத் தொடர்ந்து நீதிபதியின் வீட்டிற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளின் வரிசை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு டெல்லி காவல்துறை தலைமையகம் சனிக்கிழமை புது தில்லி மாவட்ட காவல்துறையிடம் கேட்டுக் கொண்டது.
மற்றொரு வட்டாரம், புது தில்லி மாவட்ட காவல்துறையிடம் ஒரு அடிப்படை ஆரம்ப அறிக்கையைத் தயாரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறியது - நீதிபதி வர்மாவின் தனிப்பட்ட செயலாளர் ஆர்.எஸ். கார்க்கியிடமிருந்து பி.சி.ஆரில் (PCR) அழைப்பு வந்த பிறகு, நீதிபதி வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறை, புதுடெல்லி மாநகராட்சி (NDMC), மத்திய பொதுப்பணித்துறை (CPWD) உள்ளிட்ட அனைத்து முதல் பதிலளிப்பவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு விபரங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
"அழைப்பைப் பெற்றவுடன், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு அறை பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர், தீயணைப்புப் படையினர் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்," என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதுதான், முதலில் மீட்புப் படையினர் பணத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது, இருப்பினும் சம்பவம் குறித்த டெல்லி தீயணைப்புப் படையின் அறிக்கையில் "எழுதுபொருள் மற்றும் வீட்டுப் பொருட்களில்" தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
டெல்லி தீயணைப்புப் படைத் தலைவர் அதுல் கார்க் வெள்ளிக்கிழமை தனது பணியாளர்கள் சில நிமிடங்களில் தீயை அணைத்ததாகக் கூறினார். நீதிபதியின் வீட்டில் பணம் இருப்பதாக வந்த செய்திகள் குறித்து கேட்டபோது, "இது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை" என்றார்.
தற்செயலாக, வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில், நீதிபதி வர்மாவை அவரது சொந்த ஊர் உயர்நீதிமன்றமான அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், உச்ச நீதிமன்றம் இந்த மாற்றம், (தீ) சம்பவம் குறித்த தகவல்களைப் பெற்றவுடன் டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியால் தொடங்கப்பட்ட உள்ளக விசாரணை நடைமுறையிலிருந்து "சுயாதீனமானது மற்றும் தனித்துவமானது" என்று கூறியது.
நீதிபதி வர்மா தனது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அக்டோபர் 11, 2021 அன்று டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.