/indian-express-tamil/media/media_files/2025/03/21/Ejzswax0OlwhpCtCCjHc.jpg)
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விவகாரம்: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் பணம் மீட்கப்பட்டதாக வெளியான அறிக்கையைத் தொடர்ந்து, அவரை மீண்டும் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் நேற்று (மார்ச் 21) முடிவு செய்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: SC Collegium transfers Delhi HC judge after cash recovery at his residence
நீதிபதி வர்மாவின் வீட்டில் பணத்தை எரித்ததாகக் கூறப்படும் வீடியோவை கொலிஜியம் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தியதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட கொலிஜியம் ஒருமனதாக இடமாற்றத்தைப் பரிந்துரைக்க முடிவு செய்ததாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், வீட்டில் இருந்த பணத்தின் அளவு குறித்து எந்த மதிப்பீடும் இல்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயாவிடம், தலைமை நீதிபதி கன்னா உண்மை கண்டறியும் அறிக்கையை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள் விசாரணைக்கு உத்தரவிடலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க இது உதவும் என்பதால், விரைவில் இதைப் பெற முயற்சி செய்யுமாறு, கொலிஜியம் உறுப்பினர்கள் தலைமை நீதிபதியிடம் பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த மேலும் பல தகவல்களை பெற நீதிபதி வர்மாவின் அலுவலகம் மற்றும் ஊழியர்களிடம் தி இந்திய எக்ஸ்பிரஸ் முயற்சி செய்த போது எந்த பதிலும் கிடைக்கவில்லை.
டெல்லி காவல்துறை வட்டாரங்களின்படி, தீ விபத்து மார்ச் 14 அன்று இரவு 11.30 மணியளவில் ஏற்பட்டது. "ஒரு ஸ்டோர் அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்தது. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு 15 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது" என்று டெல்லி போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
"துக்ளக் ரோடு காவல் நிலையத்தில் தினசரி டைரி பதிவு செய்யப்பட்டது. ஆனால், பணம் மீட்கப்பட்டது குறித்து அறிக்கையில் குறிப்பிடவில்லை" என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. தீயணைப்புத் துறைத் தலைவர் அதுல் கர்க்கைத் தொடர்பு கொண்டபோது, இது ஒரு சிறிய தீ விபத்து என்பதால், அவர்கள் இப்போது விவரங்களைச் சேகரித்து வருவதாகக் கூறினார்.
மார்ச் 14 அன்று தீ விபத்து ஏற்பட்டபோது, நீதிபதி வர்மா வீட்டில் இல்லை என்றும், தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் ஒரு அறையில் இருந்த பணத்தை மீட்டதாகவும் கூறப்படுகிறது.
இது காவல்துறையின் உயரதிகாரிகளுக்கும், அதன் விளைவாக, இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் அலுவலகத்திற்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க வியாழன் அன்று 5 பேர் கொண்ட கொலிஜியம் கூட்டத்திற்கு தலைமை நீதிபதி அழைப்பு விடுத்தார். கொலிஜியம் உறுப்பினர்கள், இடமாற்றத்தைப் பரிந்துரைக்க ஒருமனதாகத் தீர்மானித்ததாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் கருதுவதாகவும், ஆனால் இது தொடர்பான இறுதி முடிவை தலைமை நீதிபதி எடுக்க வேண்டும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நீதிபதியை இடமாற்றம் செய்வதற்கான பரிந்துரை மீதான கொலிஜியத்தின் தீர்மானம் இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.