'நான் முதல்வராக மகிழ்ச்சியாக இல்லை' என கர்நாடக முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி தனது தொண்டர்கள் முன்பு கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதை பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ், மஜத-வுடன் திடீர் கூட்டணி வைத்தது. இதனால் பாஜக ஆட்சியமைக்க வேண்டுமென்றால் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற சூழல் நிலவியது. இருப்பினும் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, பாஜக-வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவையே ஆட்சியமைக்க அழைக்க, அவர் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். மேலும் 15 நாட்களுக்குள் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவை அடுத்து, பதவியேற்ற இரண்டாவது நாளே, எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க நேரிட்டது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்காமலேயே எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடகத்தின் முதல்வராக 2-ஆவது முறையாக குமாரசாமி கடந்த மே மாதம் 23ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் முதல்வராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில், பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்று பேசிய முதல்வர் குமாரசாமி, "உங்களுடைய அண்ணனாகிய நான் முதல்வராகிவிட்டேன் என்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஆனால், ஒன்றைச் சொல்கிறேன். நான் மகிழ்ச்சியாக இந்தப் பதவியில் இல்லை.
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி ஆட்சியில், அந்த சிவபெருமானை போல விஷத்தை சாப்பிட்டுவிட்டு நான் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறேன். இப்போது இருக்கும் சூழல் எனக்கு மகிழ்ச்சியாக இல்லை.
கடந்த ஒன்றைரை மாதங்களாக, நான் அதிகாரிகளை சமாதானப்படுத்தித்தான், விவசாயிகளுக்கு வேளாண் கடன் தள்ளுபடிக்கு ஏற்பாடு செய்தேன் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், இப்போது சிலர் அன்ன பாக்கியா திட்டத்தில் 5 கிலோ அரிசிக்குப் பதிலாக 7 கிலோ அரிசி வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். ரூ.2500 கோடிக்கு நான் எங்கு செல்வேன். இன்னும் எத்தனை நாட்கள் இந்தப் பதவியில் இருப்பேன் என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று குமாரசாமி கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
முதல்வர் குமாரசாமி பேசியது குறித்து, துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வராவிடம் கேட்டபோது, "முதல்வராக இருப்பதில் மகிழ்ச்சியில்லை என்று குமாரசாமி எப்படிக் கூறலாம்? அவர் மகிழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். அவர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவை கர்நாடகாவில் ஆட்சி அமைக்கவிடக் கூடாது என்பதால் தான் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி வைத்தன. குமாரசாமி முதல்வர் ஆக்கப்பட்டார். ஆனால், கூட்டணி ஆட்சி எனும் பெயரில் விஷத்தை உண்டு நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்" என குமாரசாமி கூறியிருப்பது கர்நாடக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.