Health ministry flags Covid-19 concerns in 6 states virus spreading rapidly : கடந்த ஒரு வாரத்தில் நாட்டில் உள்ள 515 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாசிட்டிவ் விகிதம் 5%-த்தை எட்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய மத்திய சுகாதாரத்துறை மூன்றாம் அலை அதிக தொற்றும் தன்மை கொண்ட ஒமிக்ரான் மாறுபாட்டால் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. தொற்று எண்ணிக்கை உயர்ந்தாலும் கூட அதிக அளவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பொதுமக்கள் மருத்துவமனையில் சேரும் நிகழ்வுகள் குறைந்துள்ளது என்றும் மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்ட சுகாதாரத்துறை கடந்த ஒரு வாரத்தில் வாராந்திர நேர்மறை விகிதம் கிட்டத்தட்ட 16% ஐத் தொட்டதாகவும் அறிவித்துள்ளது.
தொற்று நிலைமை நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. மேலும் இதனால் ஏற்பட்டுள்ள இறப்புகளும் குறைவு என்பது தெளிவாகியுள்ளது. தடுப்பூசி சிறந்த கவசமாக செயல்பட்டு வருகிறது. இறப்பு விகிதம் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. ஆனாலும், மொத்த பாசிட்டிவ் விகிதமானது 16%. இது கொஞ்சம் அதிக அளவில் உள்ளது. கோவா போன்ற சில மாநிலங்களில் பாசிட்டிவ் விகிதம் 50% ஆக உள்ளது. வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. தடுப்பூசி மற்றும் முகக்கவசம் அணிதல் ஆகியவை மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பை நாம் இப்போது குறைக்க கூடாது என்று இந்தியாவிற்கான கோவிட்19 பணிக்குழு தலைவர் டாக்டர் வி.கே. பால் அறிவித்துள்ளார்.
ஜனவரி 19ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாடு முழுவதும் 515 மாவட்டங்கள் பாசிடிவ் விகிதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 12ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 335 மாவட்டங்களில் மட்டுமே பாசிடிவ் விகிதங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜனவரி 13 மற்றும் ஜனவரி 20 தேதிகளில் முடிவடைந்த வாரங்களுடன் பாசிட்டிவ் விகிதங்களை ஒப்பிடும் போது, தொற்று எண்ணிக்கை உயர்வு காரணமாக தொடர்ந்து 6 மாநிலங்கள் கவலைக்குரியதாக நீடித்து வருகிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா (20.35% Vs 22.12% ); கர்நாடகா (6.78% Vs 15.12%); தமிழ்நாடு (10.70% Vs 20.50%); கேரளா (12.28% Vs 32.34%); டெல்லி (21.70% Vs 30.53%) மற்றும் உத்தரபிரதேசம் (3.32% Vs 6.33%) என்ற ரீதியில் பாசிட்டி விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம், நாங்கள் நிலைமையை மதிப்பாய்வு செய்கிறோம். பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்ற மத்தியக் குழுக்களை இந்த மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளோம். மாநிலங்களின் சுகாதார நிர்வாகத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்று பூஷன் தெரிவித்தார்.
தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட மருத்துவமனைகளில் சேரும் மக்களின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. ஏப்ரல் 30 அன்று இரண்டாம் அலையின் போது 3.86 புதிய வழக்குகள் பதிவாகின. ஆனால் இறப்புகள் 3 ஆயிரமாக இருந்தது. ஏப்ரல் 1 முதல் 30 தேதிகளில் 2% மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தியிருந்தனர். ஜனவரி 20 தேதி அன்று 3.17 லட்சம் வழக்குகள் பதிவாகின. ஆனால் இறப்பு எண்ணிக்கை 380 மட்டுமே. மேலும் 72% மக்கள் தங்களின் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர். இந்த இரண்டு நிகழ்வுகளின் ஒப்பீட்டில் மரணங்கள் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசியின் தாக்கம் என்பதை கண்டறிந்தோம். முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் நோயின் தன்மை குறைவாகவும் லேசானதாகவும் மட்டுமே உள்ளது. அதனால்தான் தடுப்பூசி போடாதவர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பூஷன் கூறினார்.
இந்த அலையின் போது அறிகுறிகளும் லேசாகவே உள்ளது. 99% பாதிக்கப்பட்ட நபர்கள் அதிக அளவில் நடுக்கத்துடன் கூடிய காய்ச்சலையோ, நடுக்கமற்ற காய்ச்சலையோ எதிர்கொண்டனர். கூடுதலாக இருமல், எரிச்சல் போன்றவையையும் அவர்கள் சந்திக்க நேரிட்டது. ஆனால் தொற்றின் 5-வது நாளில் அறிகுறிகள் குறைய துவங்குகிறது. தசை பலவீனம் மற்றும் சோர்வு உள்ளது. டெல்லியில் தற்போதைய எழுச்சியின் போது நாம் காணும் அறிகுறிகள் இவை மற்றும் முழு நாடும் இப்படியான அறிகுறிகளையே எதிர்கொண்டிருக்கும் என்று நம்புகிறோம். குழந்தை நோயாளிகளில், 11 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள், காய்ச்சல் மற்றும் மேல் சுவாசக்குழாய் தொற்று பொதுவானது, அதாவது தொற்று நுரையீரலை பாதிக்காது. மேலும், கோவிட்-19-ல் ஏற்படும் நிமோனியா பாதிப்புகளும் குறைவானவையே.
மருத்துவமனைகளுக்கு அதிக அளவில் அழுத்தத்தை இந்த தொற்று ஏற்படுத்தவில்லை என்று டெல்லியின் நிலைமையை சுட்டிக்காட்டினார் பூஷன். மருத்துவமனைகளில் சேரும் நபர்களின் எண்ணிக்கை 1600 முதல் 2600 வரை மட்டுமே உள்ளது. ஜனவரி 9ம் தேதி துவங்கி ஜனவரி 19ம் தேதி வரை 75 ஆயிரம் நபர்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட இந்த எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்று அவர் கூறினார்.
ஐ.எம்.சி.ஆர் பொது இயக்குநர் பலராம் பார்கவா, நாடு முழுவதும் எடுக்கப்படும் சோதனைகள் இரண்டாம் அலையின் எடுக்கப்பட்டதை போன்றே தொடருகிறது. இந்த முறை வீடுகளில் சோதனை மேற்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். 2021ம் ஆண்டு மொத்தமாகவே 3000 பேர் தான் வீடுகளில் சோதனைகள் மேற்கொண்டனர். இந்த ஆண்டு வெறும் 20 நாட்களில் 2 லட்சம் பேர் வீடுகளில் சோதனையை செய்து கொண்டனர். சில மாவட்டங்களில் சோதனை எண்ணிக்கை குறைந்து வருவதையும் நாங்கள் பதிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil