புதுவையில் கடந்த பிப்ரவரி முதல் கடுமையான கோடை வெப்பம் தகிக்க தொடங்கியது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தகிக்கும் கோடை வெப்பம் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே தொடங்கியது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடுமையாக வெயிலின் தாக்கம் இருந்தது. ஒரு சில நாட்கள் 100 டிகிரியை தாண்டி வெப்பம் தகித்தது. இதனால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வட முடியாத நிலை ஏற்பட்டது.
கோடை வெப்பம் அதிகரித்ததால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தி கோடை விடுமுறையை அரசு அறிவித்தது. சுகாதாரத்துறை பகல் நேரங்களில் முதியோர், குழந்தைகள் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது. கடந்த வார இறுதியில் அதிகாலை நேரத்தில் லேசான மழை பெய்தது. குளிர்ந்த காற்றும் வீசியது.
இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் மீண்டும் கடுமையான வெப்பம் நிலவியது. இந்நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு மேல் லேசாக மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல, செல்ல கனமழையாக பெய்ய தொடங்கியது. விடிய விடிய மழை பெய்தது. புதுவை நகர பகுதிகளில் 10 செ.மீ மழையும், பாகூரில் 17 செ.மீ மழையும், பத்துக்கண்ணு பகுதியில் 12 செ.மீ மழையும் பதிவானது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளான பாவாணர் நகர், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. சாலைகளில் தேங்கிய நீரை பொதுப்பணித்துறை, நகராட்சி துறை ஊழியர்கள் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலையும் மழை பெய்தது. இதனால் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோருக்கு சிரமம் ஏற்பட்டது.
தொடர்ந்து மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. கடும் கோடை வெப்பத்துக்கு இடையில் மழை பெய்தது புதுவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“