Helicopter crash Tamil News: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலியானார். இந்த விபத்தில் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட மேலும் 12 பேர் பலியானார்கள்.
இந்த கோர விபத்துக்கு என்ன காரணமாக இருக்கலாம் என்பது குறித்து அறிய விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கான காரணத்தை கண்டறிய உதவும் கருப்பு பெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் விபத்துக்கான காரணம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை நடத்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் பதவி உயர்வு கிடைத்த மூத்த அதிகாரி மற்றும் சியாச்சினில் பணியாற்றிய லெப்டினன்ட் கர்னல் ஆகியோரும் உயிரிழந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான ‘பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிடர்’ , ஹரியானாவின் பஞ்ச்குலாவைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறை இராணுவ அதிகாரி ஆவார்.

இவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஜெனரல் பிபின் ராவத்தின் பணியாளராக இருந்தார். முன்னதாக, இவர் ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸின் இரண்டாவது பட்டாலியனுக்கு தலைமை தாங்கினார். மேலும், பிரிக் லிடர் மேஜர் ஜெனரல் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்டு இருந்த இவர் விரைவில் ஒரு பிரிவின் தலைமை அதிகாரியாக பணியாற்றுவதாக இருந்தார்.
ஓய்வுபெற்ற (பிரிகேடியர்) மூத்த அதிகாரியின் மகனான லிடர், திபெத்தின் இமாச்சல எல்லையில் ஒரு படைப்பிரிவுக்கும் தலைமை தாங்கியவர். பின்னர் அவர் புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் மதிப்புமிக்க படிப்பில் பயின்றார். இராணுவம் தொடர்பாக கட்டுரைகள் எழுதக்கூடியவர். இந்தாண்டு செப்டம்பரில், அவர் நிலப் போர் ஆய்வு மையத்திற்காக ‘சீனாவின் எதிர் விண்வெளி திறன்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
லிடரை “டோனி” என்று அவரது நண்பர்கள் செல்லமாக அழைப்பதுண்டு. கல்வியாளரான கீதிகாவை மணந்தார். இவருடைய மகள் (16 வயது) பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். நவம்பர் 28 அன்று, மகளின் புத்தக வெளியீடு கொண்டப்பட்டது. “இன் சர்ச் ஆஃப் எ டைட்டில்” என்கிற அந்த புத்தகம் மதுலிகா ராவத் மற்றும் புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண் பேடி ஆகியோரால் வெளியிடப்பட்டது.
ஜெனரல் ராவத்தின் மற்றொரு அதிகாரி, லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், ராவத்தின் அதே படைப்பிரிவான 11 கோர்க்கா ரைபிள்ஸைச் சேர்ந்தவர். சியாச்சின் பனிப்பாறையில் பணியமர்த்துதல் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அவர் தனது பட்டாலியனுடன் பணியாற்றினார். அவர் லக்னோவைச் சேர்ந்தவர். ஆனால், அவரது குடும்பம் புதுடெல்லியில் குடியேறியது.

இரண்டு அதிகாரிகளைத் தவிர, ஜெனரல் ராவத்தின் ஊழியர்களில் சிறப்புப் படையின் ஐந்து பிஎஸ்ஓக்கள் மற்றும் 11 கோர்க்கா ரைபிள்ஸின் ஹவில்தார் ஆகியோரும் விபத்தில் இறந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக ஜெனரல் ராவத்துடன் பணியாற்றிய நாயக் குர்சேவக் சிங் (35) என்பவரும் விபத்தில் உயிரிழந்தார். அவர் பஞ்சாபின் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள டோட் கிராமத்தைச் சேர்ந்தவர்.
குர்சேவாக்கின் சகோதரர் குர்பக்ஷ் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “நாங்கள் இந்த விபத்து பற்றி கனவுவில் கூட நினைக்கவில்லை. குர்சேவாக் நேற்று இரவு கூட எங்களிடம் பேசினார், இன்று அவர் இல்லை.”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“