புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, உயர்த்தப்பட்ட அபராதத்தை தவிர்க்கும் பொருட்டு, குஜராத் இளைஞர் மேற்கொண்டுள்ள புதிய யுக்தி, நெட்டிசன்களால், உண்மையான இந்தியன் என்ற பாராட்டை பெற வைத்துள்ளது.
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி, ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் இயக்குதல், அதிவேக டிரைவிங் உள்ளிட்ட செயல்களுக்கு விதிக்கப்படும் அபராதம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் குர்கிராம் போலீசார் கூட போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ஸ்கூட்டி மற்றும் டிராக்டர் ஓட்டிகளிடமிருந்து தலா ரூ .23 ஆயிரம் மற்றும் ரூ .59 ஆயிரம் அபராதம் விதித்திருந்ததுக குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அபராதம் தவிர்க்கும் பொருட்டு, குஜராத்தை சேர்ந்த இளைஞரின் நடவடிக்கை சமூகவலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் ஆர்.ஷா. இவர் தனது டிரைவிங் லைசென்ஸ், வண்டியின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.), இன்சூரன்ஸ் பேப்பர் உள்ளிட்ட வண்டியின் முக்கிய ஆவணங்களை, தனது ஹெல்மெட்டில் ஒட்டிவைத்துள்ளார். இதன்மூலம் போக்குவரத்து போலீசார் வண்டியின் ஆவணங்களை எளிதாக பார்க்க முடிகிறது. இதனால் அவர்களில் நேரமும் மிச்சமாகிறது. ஷாவின் இந்த நடவடிக்கைக்கு போலீசார் மட்டுமின்றி மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஷாவின் இந்த புதிய யுக்தி, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. நெட்டிசன்கள், ஷாவின் இந்த நடவடிக்கைக்காக அவரை உண்மையான இந்தியன் என புகழாரம் சூட்டி மகிழ்கின்றனர்.