மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்ந்த நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி சமர்பித்த அறிக்கையில், பாலியல் துன்புறுத்தல், பெண்கள் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமை, பாலின பாகுபாடு மற்றும் பாரபட்சம், ஊதியத்தில் ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்வதாக அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.
Read In English: ‘Highly placed men involved… many icons crumbled’: Hema panel flags sexual harassment in Malayalam film industry
பொதுவாக எந்த வேலையாக இருந்தாலும், இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தான் நிலவி வருகிறது. இதற்கு அவ்வப்போது நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் திரைத்துறையில் அதிகம் என்று நடிகைகள் பலரும் தங்களது பேட்டிகளில் கூறி வருகின்றனர். இதனை தடுக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை தேவை என்றும் கூறி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஓடும் வாகனத்தில் பிரபல நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஹேமா தலைமையில் 3 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு மலையாள திரையுலகில் பணியாற்றி வரும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஆய்வில், சேகரிக்கப்பட்ட தகவல்கள், இது குறித்து மாநில அரசிடம் இருந்து வந்த அறிக்கை, நீதிமன்றத்திலும் மாநில தகவல் ஆணையத்திலும் பல சுற்றுச் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இன்று (ஆகஸ்ட் 19) வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், சாட்சிகளால் கூறப்படும் சம்பவங்களில் "சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களும் அடங்கும் என்று ஆய்வு குழு தெரிவித்துள்ளது,
சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருக்கும் மனிதர்கள் செய்த சில சம்பவங்களை சாட்சிகள் கூறியது மிகவும் வேதனையாக இருக்கிறது. இவர்களைத்தான் சமூகம் மிகுந்த மரியாதையுடனும் தங்களது அஸ்தான நட்சத்திரமாகவும் பார்க்கிறது. இவர்கள் அனைவரு் மலையாளத் திரையுலகின் போக்கை மாற்றும் செல்வாக்கும் சக்தியும் கொண்டவர்கள் துரதிர்ஷ்டவசமாக, இவர்கள்தான் தொழிலின் சீரழிவுக்கு முக்கிய பங்களிப்பு செய்கிறார்கள்.
தொழில்துறையில் பெண்கள் அனுபவித்த கஷ்டங்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், பல பெண்கள் இந்த பிரச்சனை குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் கூட சொல்லவில்லை என்றும் அறிக்கை கூறியுள்ளது. மலையாள திரைப்படத் துறை இயங்கும் விதம் மற்றும் பெண்கள் பேசுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த தகவல்களை முன்பு வெளியிடவில்லை என்று ஆய்வு குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வில் ஆச்சரியப்படும் விதமாக,சில ஆண்களும் தொழில்துறையில் பல சிக்கல்களைச் சந்தித்துள்ளனர் என்பதை நாங்கள் அறிந்தோம், மேலும் அவர்களில் பலர், சில முக்கிய கலைஞர்கள் உட்பட, அங்கீகாரம் இல்லாமல், சினிமாவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டனர். அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ, திரைத்துறையை ஆளும் தொழில்துறையின் சக்திவாய்ந்த நபர்களடம் இருந்து ஒருவர் அல்லது மற்றொரு நபரின் கோபத்திற்கு ஆளாகி இருக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையில், ஆண்கள் மற்றும் பெண்கள் இரு சாட்சிகளின் வாய்மொழி அறிக்கைகளை வைத்தே தயார் செய்யப்பட்டுள்ளது. சாட்சிகள் தயாரித்த பல்வேறு ஆவணங்கள், ஆடியோ கிளிப்புகள், வீடியோ கிளிப்புகள், ஸ்கிரீன் ஷாட்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள், வாட்ஸ்அப் அரட்டைகள் போன்றவற்றையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம் என்று அந்த அறிக்கையல் ஆய்வுகுழு கூறியுள்ளது.
அதே சமயம் திரைத்துறையில், பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்காததற்கு முக்கிய காரணம், ஆன்லைன் விமர்சனங்களை எதிர்கொள்ளும் எதிர்கொள்ள இருந்த பயமும் தான் காரணம் என்று கூறியுள்ளனர். எதையும் செய்யக்கூடிய சக்திவாய்ந்த நபர்கள் திரைத்துறையில் இருப்பதாக ஒரு முக்கிய நடிகர் கமிஷனிடம் கூறினார். இந்த "மாஃபியா" நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை திரைத்துறையில் இருந்து தடை செய்யலாம் என்று அறிக்கை கூறுகிறது.
அதேபோல், மலையாளத் திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உள் புகார் குழு (ஐசிசி) அமைப்பது சரியான தீர்வாக இருக்காது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள ‘காஸ்டிங் கவுச்’ பற்றி அந்த அறிக்கையில் மற்ற துறைகளில் பெண்கள் வேலை கேட்டு செல்லுவதும், சினிமா துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற முயற்சி செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. திரைப்படத் துறையில் வேலை பெற திறமையும் தகுதியும் மட்டும் போதாது பாலியல் செயலுக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் வேலைகளுக்கான சலுகைகள் கொடுக்கப்படும் என்று கூறப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் பணிபுரியும் பெண்களின் ஹோட்டல் அறைகளின் கதவுகளை குடிபோதையில் ஆண்கள் பலமுறை தட்டுவது போன்ற சம்பவங்கள் குறித்தும் கூறியுள்ள ஆய்வுக்குழு, பல பெண்கள் தாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று பயந்து வேலைக்குச் செல்லும் போது தங்கள் குடும்பத்திலிருந்து யாரையாவது ஒருவரை தங்களுடன் அழைத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று யோசித்து செயல்படுகின்றனர். இதில் ஒரு பெண் "பிரச்சினையை உருவாக்குபவராக" கருதப்பட்டால், அவளுக்கு மீண்டும் வாய்பு கிடைக்காமல் போகலாம் என்பதால், அவர்கள் எதிர்கொள்ளும் பல கொடுமைகளைப் பற்றி அவர்கள் மௌனம் காக்க நேரிடுகிறது என்று அறிக்கை கூறியுள்ளது.
இது குறித்து அறிக்கையை நீதிபதி ஹேமா கமிட்டி கடந்த 2019 டிசம்பர் மாதம், மாநில அரசிடம் சமர்ப்பித்தது. இருப்பினும், அந்த அறிக்கை கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக வெளியிடாமல் இருந்த நிலையில’, இதைபற்றி தெரிந்துகொள்ள, பலரும் பல ஆர்.டி.ஐ பிரிவில் விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தாலும், அனைத்து விண்ணப்பங்களும்,நிராகரிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியானால், பல சாட்சிகளின் தனியுரிமையைப் பாதிக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
நடப்பு ஆண்டு ஜூலை மாதம் தொடக்கத்தில், சாட்சிகளை அடையாளம் காணாமல் அறிக்கையை வெளியிடுமாறு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இருப்பினும், ஒரு திரைப்பட தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுகி இந்த அறிக்கையை வெளியிட இடைக்கால தடை பெற்றார். கடந்த வாரம், கேரள உயர் நீதிமன்றம், அறிக்கையின் நகல்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்குமாறு அரசுக்கு உத்தரவு பிறப்பித்து தடையை நீக்கியது.
இதற்கிடையில், நடிகை ரஞ்சினி இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு விசாரிக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தார், ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, முதலில் 295 பக்கங்கள் கொண்ட அறிக்கை, 63 பக்கங்கள் திருத்தப்பட்ட பிறகு வெளியிடப்பட்டது. ஹேமா கமிட்டி அறிக்கையின்படி மலையாளத் திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் 17 பிரச்சனைகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
1. பெண்கள் தொழில்துறையில் நுழைந்த காலத்திலிருந்தே அவர்களிடம் பாலியல் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன
2. வேலை செய்யும் இடத்திலும், போக்குவரத்திலும், தங்கும் இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
3. பெண்கள் மனக்கசப்பு அல்லது பாலியல் கோரிக்கைகளை நிறைவேற்ற தங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொன்னாலும், அவர்கள் சித்திரவதை செய்யப்படுவார்கள்
4. பணிபுரியும் இடங்களில் கழிவறை, உடை மாற்றும் அறை உள்ளிட்ட பெண்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாதது.
5. பெண்களுக்கு அவர்களின் பணியிடத்திலும் தங்குமிடத்திலும் பாதுகாப்பு இல்லை
6. சினிமாவில் தனிநபர்களை அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்ட விரோதமாக தடை செய்தல்
7. தொழிலில் வேலை செய்ய தடை விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலின் கீழ் பெண்களை அமைதிப்படுத்துதல்
8. ஆண் ஆதிக்கம், பாலின சார்பு மற்றும் பாலின பாகுபாடு பார்க்கப்படுவது
9. போதைப்பொருள் மற்றும் ஆல்கஹால் பயன்பாடு, ஒழுங்கற்ற நடத்தை மற்றும் வேலை செய்யும் இடத்தில் தவறான நடத்தை, இது மொத்த ஒழுக்கமின்மைக்கு வழிவகுக்கும்
10. பணிபுரியும் இடங்களில் இழிவான அல்லது மோசமான கருத்துக்களுக்கு உட்பட்டு இருத்தல்
11. தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப முதலாளிக்கும் பணியாளருக்கும் இடையிலான ஒப்பந்தங்களை நிறைவேற்றாதது
12. ஒப்புக்கொண்ட ஊதியத்தை வழங்கத் தவறுதல்
13. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான ஊதிய வேறுபாடு மற்றும் ஊதியத்தில் பாலின பாகுபாடு
14. தொழில்நுட்ப பக்கம் சினிமாவில் பெண்களை வேலை செய்ய அனுமதிக்கும் எதிர்ப்பு/தயக்கம்
15. ஆன்லைன் துன்புறுத்தல்
16. அவர்களின் சொந்த உரிமைகள் பற்றிய சட்ட விழிப்புணர்வு இல்லாமை
17. அவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட எந்த அதிகாரமும் இல்லாதது
என 17 பிரச்சனைகள் குறித்து ஹேமா கமிட்டி பட்டியலிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.