அமலாக்கத்துறை வழக்கு, சிறை தண்டனை, பா.ஜ.க-வின் பிளவுவாதம் போன்ற எதுவுமே ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனையோ அல்லது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியையோ தடுத்ததாக தெரியவில்லை. இன்று (நவ 23) மாலை 4:30 நிலவரப்படி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களில் முன்னணி வகிக்கிறது. குறிப்பாக, கடந்த முறையை விட 4 இடங்கள் அதிகரித்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு தொலைபேசி மூலம் ஹேமந்த் சோரன் நேர்காணல் அளித்துள்ளார். அதில், ஜார்கண்ட் மக்கள் தங்களுக்கே உரிய "உலகக் கண்ணோட்டம்" கொண்டிருப்பதாகவும், பழங்குடியினர் மீது பா.ஜ.க-வின் அக்கறையின்மைக்கு அவர்களுக்கு பதில் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Hemant Soren interview: ‘BJP does symbolism by making a tribal the President, treats others in community indifferently’
*ஜார்கண்டில் மீண்டும் ஆட்சியமைப்பதற்கு இந்தியா கூட்டணி தயாராக உள்ளது. இந்த தருணத்தில் எப்படி உணருகிறீர்கள்?
அதை நான் எவ்வாறு கூறுவேன். நான் சற்று உணர்ச்சிவசமடைந்துள்ளேன்.
*கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலை விட தற்போது ஜே.எம்.எம் முன்னேற்றம் அடைந்துள்ளது. வாக்காளர்களிடம் என்ன எதிரொலித்ததாக கருதுகிறீர்கள்?
சட்டசபையில் நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது (ஜூலை மாதம் சோரன் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு) என் மீது பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியவர்களை நான் விடமாட்டேன் எனக் கூறியிருந்தேன்.
*ஜார்க்கண்டில் பா.ஜ.க-வின் ‘ஊடுருவு’ பிரச்சாரம் வேலை செய்யவில்லை என்று தெரிகிறதே...
நான் அவர்களின் கதையை எதிர்த்தேன், பிரிவினை அரசியலுக்கு செவிசாய்க்கவில்லை. மாநிலத்தின் வளங்கள் மீது தான் பாஜகவின் பார்வை இருந்தது. எனது நலத்திட்டங்களை வாக்காளர்களுக்கு மீண்டும் வலியுறுத்தினேன்.
எனது வார்த்தைகள் கனமாக இருந்தன. அதனால்தான் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்தனர்.
பாஜகவின் பிரச்சாரம் மற்றும் பிரித்தாளும் அரசியலால் மக்கள் தவறாக வழிநடத்தப்படாமல் நான் காப்பாற்றினேன்.
* மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி எதிர்க்கட்சிகளை வீழ்த்தியது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஜார்கண்ட் மக்கள் வித்தியாசமான உலகளாவிய கண்ணோட்டம் கொண்டுள்ளனர். ஜார்கண்ட் வித்தியாசமான குணாதிசியம், சாதி, மொழி, புவியியல், இயற்கை வளம் கொண்டுள்ளது. விடாமுயற்சியால் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். மக்கள் சக்தியால் அரசு மாறுபட்ட சிந்தனையுடன் செயல்படுகிறது.
பகவான் பிர்சா முண்டா இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஒரு மரியாதைக்குரிய சின்னமாக இருக்கிறார். ஆனால் பா.ஜ.க அவரை வெறும் அடையாளமாகச் சுருக்கிவிட்டது.
* நீங்கள் எந்த அடையாளத்தைப் பற்றி பேசுகிறீர்கள்?
அவர்கள் மண்டல் முர்முவை அழைத்து வந்து பா.ஜ.க-வில் சேர வைத்தனர். பிர்சா முண்டாவின் பரம்பரையையும் அழைத்து வந்து கண்காட்சியாக மாற்றினர். அவர்கள் ஒரு பழங்குடியினரை ஜனாதிபதியாக்கி அடையாளத்தில் ஈடுபட விரும்புகிறார்கள். பெரும்பாலும், மற்ற பழங்குடியினரை பா.ஜ.க அலட்சியமாக கருதுகிறது.
* உங்கள் மனைவி கல்பனா சோரனிடம் பேசியிருக்கிறீர்களா?
அவர் தனது தொகுதியில் மிகவும் பிஸியாக இருக்கிறார், என்னால் அவருடன் பேச முடியவில்லை. ஆனால், அவரது பங்களிப்பு மகத்தானது.
* உங்களின் அடுத்த அரசு எதில் கவனம் செலுத்தும்?
கவனம் தேவைப்படாத ஒரு பகுதி கூட ஜார்கண்டில் இல்லை. இது மிகவும் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்று. சமூக பாதுகாப்பு என்பது காலத்தின் தேவை. மக்கள் போராடி வாழ வேண்டி இருக்குறது. அவர்களுக்கு சொற்ப அளவிலான ரேஷனையே வழங்குகிறோம். அவர்களுக்கு எப்படி வளர்ச்சி ஏற்படும்?
*உங்கள் ஆட்சியை எவ்வாறு மதிப்பிடுவீர்கள்?
பா.ஜ.க-வின் கேடான செயல்பாடுகள் இறங்க வேண்டும். பிறகு மாநிலத்தை எவ்வளவு தூரம் அழைத்துச் செல்வேன் என பாருங்கள். ஆனால், ஜார்கண்ட் ஒன்றும் குஜராத் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜார்கண்ட் தன்னிறைவு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன். மாநிலத்தில் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* சுகாதாரம் மற்றும் கல்வி மாநிலத்தின் முக்கிய பிரச்சனையாக உள்ளது...
சுகாதார துறை காங்கிரஸுடன் இருந்தது. ஆனால் இனி நானே அதனை கண்காணிப்பேன்.
கல்வியில், ஆங்கில வழி அரசு பள்ளிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு ஆங்கில செய்தித்தாள்களை கொடுப்போம். நான் நூலகங்களை உருவாக்க விரும்புகிறேன். மொத்தத்தில், கலாச்சார மற்றும் சமூக வளர்ச்சி இருக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் உள்ள சக மாணவர்களிடம் கற்றுக் கொள்ள மாணவர்களை அனுப்பவும் திட்டமிட்டுள்ளேன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.