“கௌரி லங்கேஷின் குரல் அமைதியாக்கப்படக் கூடாது. அது இன்னும் உரக்க பேசப்பட வேண்டும்”, என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த பத்திரிக்கையாளரும் சமூக ஆர்வலருமான கௌரி லங்கேஷ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். தீவிர இந்துத்துவ எதிர்ப்பு, பகுத்தறிவு ஆகியவற்றை தன் எழுத்துகளால் மக்களுக்கு கடத்தியவர் கௌரி லங்கேஷ். அதனால், அவரது கொலை கருத்து சுதந்திரத்தின் மீதான பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு பெங்களூருவில் ’கௌரி டே’ என்ற பெயரில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில், நடிகரும் கௌரி லங்கேஷின் நீண்ட கால நண்பருமான பிரகாஷ் ராஜ், குஜராத் மாநில வட்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ தலைவர்களான கண்ணையா குமார், ஷீலா ரஷீத், உமர் காலித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், “கௌரி நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறார். சமூகத்திற்காகவும், அநீதியை எதிர்த்தும் பேசக்கூடியவர்கள் இறந்தால், அவர்களுடைய குரல் அமைதியாக்கப்படுவதில்லை என வரலாறு உள்ளது. அவர்களுடைய குரல், மரம்போன்று இன்னும் நிறைய குரல்களை துளிர்க்கச் செய்கிறது.”, என கூறினார்.
ரோஹித் வெமுலாவின் மரணம், குஜராத் மாநிலம் உனாவில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் ஆகியவை போன்று, கௌரி லங்கேஷின் மரணம் அவரை கொன்றவர்களுக்கு எதிராக போராடும் புதிய குரல்களை உருவாக்கியிருப்பதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
”கௌரியின் மரணத்தை கொண்டாடுபவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். கௌரியை ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய மரணம் பல குரல்களை தோற்றுவித்துள்ளது. சில மரணங்கள் அப்படித்தான். அவை சிலவற்றை உருவாக்கும், எதையும் கொல்லாது. ரோஹித் வெமுலாவின் மரணம் கண்ணையா குமார், ஷீலா ரஷீதை உருவாக்கியது. உனாவில் தலித்துகளின் மரணம் ஜிக்னேஷ் மேவானியை உருவாக்கியது. கௌரியின் மரணம், என்னையும், என்னை போன்றவர்களையும் உருவாக்கியது.”, என கூறினார்.