இமாச்சல் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது: காங்கிரஸ், பாஜக இடையே பலத்த போட்டி!

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 50,25,941 பேர் வாக்களிக்க உள்ளனர்

By: November 9, 2017, 8:51:55 AM

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியுள்ளது. 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் காங்கிரஸ் பாஜ இடையே ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இமாச்சலில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக.வும் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளன. அவர்களில் 62 பேர் எம்எல்ஏ.க்கள்.

காங்கிரஸ் முதல்வர் வீரபத்ர சிங், 10 அமைச்சர்கள், 8 தலைமை நாடாளுமன்ற செயலாளர்கள், துணை சபாநாயகர் ஜகத் சிங் நெகி, முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால், 12-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களாவர்.

சபாநாயகர் பிபிஎல் புடெய்ல் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல், தனது மகன் ஆஷிஷ் குமாரை (பலம்பூர் தொதியில்) களம் இறக்கி உள்ளார். இந்தத் தேர்தலில் பாஜக 6 பெண் வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் சார்பில் 3 பெண்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 19 பெண்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் 16 மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள், சுயேச்சைகள் 180 பேர் உட்பட மொத்தம் 338 பேர் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2012-ம் ஆண்டு தேர்தலில் 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளையும் பாஜக 26 தொகுதிகளையும் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு 43.21 சதவீத வாக்குகளும் பாஜக.வுக்கு 38.83 சதவீத வாக்குகளும் கிடைத்தன. சுயேச்சைகள் 15.87 சதவீத வாக்குகள் பெற்றனர். அவர்களில் 5 பேர் வெற்றி பெற்றனர்.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் – பாஜக.வுக்கு இடையேதான் நேரடி மோதல் நிலவுகிறது. மூன்றாவது அணி எதுவும் இல்லை. கடந்த 1985-ம் ஆண்டு முதல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகள்தான் ஆட்சியைப் பிடித்துள்ளன. அதன்படி இந்த முறை தங்களுக்கே வெற்றி என்று பாஜக நம்பிக்கையுடன் கூறி வருகிறது.

முதல்வர் வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸும், முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் தலைமையில் பாஜக.வும் தேர்தலைச் சந்திக்கின்றன.

இந்த நிலையில், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 50,25,941 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதற்காக 7,525 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் 37,605 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 17,850 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர மத்திய துணை ராணுவப்படையை சேர்ந்த 65 கம்பெனிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய தேர்தல் அதிகாரி புஷ்பேந்தர் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடைபெற உள்ள 68 தொகுதிகளில் உள்ள 983 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 399 வாக்குப்பதிவு மையங்கள் மிகுந்த பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் பதற்றமான வாக்குபதிவு மையங்களில் 297 இடங்கள் கங்கரா மாவட்டத்திலும், கின்னார் மாவட்டத்தில் 2 மையங்களும் அமைந்துள்ளன. மிக உயர்ந்த மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள கிக்கிம் வாக்குப்பதிவு மையத்தில் 194 வாக்காளர்களும், கின்னார் பகுதியின் வாக்குப்பதிவு மையத்தில் குறைந்தபட்ச வாக்காளர்களாக 6 பேரும் வாக்களிக்க உள்ளனர்.

இமாச்சல் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் சுமார் 7,525 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இது தவிர யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையிலான ரசீது வாக்களித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சட்டப்பேரவை தேர்தலில் தான், இந்த ரசீது வழங்கும் முறை செயல்படுத்தப்படுகிறது. இதில் சரிபார்த்தபின்னர் ரசீதை அதற்கான பெட்டியில் போட்டுவிட்டு செல்ல வேண்டும். தேர்தலில் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் வாக்காளர்கள் அடையாள அட்டை தவிர 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Himachal pradesh assembly elections 2017 voting underway at 68 constituencies

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X