ராஜீவ் பிண்டலுடன் இமாச்சல முதல்வர் ஜெய் ராம் தாகூர் (இடது). (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: பிரதீப் குமார்)
இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் ராஜீவ் பிண்டால் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். கொரோனா மருத்துவ பொருட்கள் கொள்முதல் செய்தது தொடர்பாக அம்மாநில அரசு ஊழல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்துள்ளதாக ராஜீவ் பிண்டால் தெரிவித்தார்.
Advertisment
இமாச்சலப் பிரேதேச மாநில சட்டப்பேரவை தலைவராக இருந்த ராஜீவ் பிண்டாலை, பாஜக தேசியத் தலவைர் ஜே.பி நாடா, பாஜகவின் மாநிலத் தலைவராக இந்த ஆண்டு ஜனவரி மாதம் தேர்வு செய்தார்.
ரூ. 5 லட்சம் கைமாற்றுவது தொடர்பாக ஆடியோ கிளிப் வெளியானதையடுத்து அம்மாநில அரசு விசாரணையை முடிக்கி விட்டது. சுகாதார சேவை இயக்குனர் டாக்டர் ஏ.கே குப்தாவை ஊழல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்து ஒரு வாரம் கடந்த நிலையில், ராஜீவ் பிண்டால் தனது ராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.
Advertisment
Advertisements
எவ்வாறாயினும், இந்த ஊழல் மோசடிக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பிண்டால் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், விசாரணை எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்தார்.
ராஜீவ் பிண்டால் ராஜினாமாவை ஜே.பி நாடா ஏற்றுக்கொண்டதாக பாஜக தனது அறிக்கையில் தெரிவித்தது.
"சமீபத்தில், சுகாதார சேவைகள் மற்றும் குடும்பநல இயக்குனரின் ஆடியோ கிளிப் ஒன்று வைரலானது. ஆளும் பாஜக அரசு உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்து, இயக்குனரை கைது செய்தது. மேலும், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஊழல் புகாரில் பாஜகவை மறைமுகமாக இழுக்கும் சதித்திட்டங்கள் சிலர் அரங்கேற்றி வருகின்றனார்" என்று பிண்டால் தனது ராஜினாமா கடிதத்தில் கூறினார்.
கொரோனா பெருந்தொற்று அவசர காலத்தில் தனது கட்சியின் பங்களிப்பை விவரித்த பிண்டால் “பாஜக மாநிலத் தலைவராக இருப்பதால், இந்த ஊழல் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அழுத்தமின்றி விசாரணை நடைபெறவும், எந்த வகையிலும் அரசியல் செல்வாக்கு நுழையக் கூடாது போன்ற தார்மீக காரணங்களை மனதில் வைத்து நான் எனது ராஜினாமாவை வழங்குகிறேன். தார்மீக அடிப்படையில் மட்டுமே நான் ராஜினாமா செய்கிறேன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் ” என்று தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்தார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தொடர்பு கொண்டபோது, "எல்லாம் கடிதத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது, வேறு எந்த அர்த்தத்தையும் அதில் இருந்து எடுக்கக்கூடாது" என்றும் பிண்டால் தெரிவித்தார்.
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினரான பிண்டால், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (கேம்ஸ்) பட்டதாரி ஆவார்.
ரூ .5 லட்சம் கைமாற்றுவது தொடர்பாக இரண்டு நபர்கள் விவாதிக்கும் ஆடியோ கிளிப்பை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து, டாக்டர் குப்தா மே 20 ஆம் தேதி இரவு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அந்த ஆடியோ கிளிப்பில் பேசிய அந்த இரண்டு நபர்கள் யார் என்று இன்னும் கண்டறியப்படவில்லை .
43 விநாடிகள் கொண்ட இந்த ஆடியோ கிளிப் இமாச்சல அரசியலில் பெரும் சலசலப்பை எற்படுத்தியது. எதிர்க்கட்சியான காங்கிரஸை அரசாங்கத்தை குறிவைத்தன. அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் ரஜ்னி பாட்டீல், ஆடியோ கிளிப்பில் லஞ்சம் கொடுக்க முன்வந்த நபர் பாஜக ஆளும் கட்சித் தலைவர் என்று நேரடியாக குற்றம் சாட்டினார்.
கிளிப்பில், முதல் மனிதர் இவ்வாறு கூறுகிறார் : “லேகே ஆ ரஹா ஹுன் சமன் அப்கா, ஜி (நான் உங்கள் பொருட்களை கொண்டு வருகிறேன்). மற்றொருவர் : “திக் ஹை, லே ஆ. கிட்னா லே அய் (சரி, கொண்டு வாருங்கள், எவ்வளவு கொண்டு வருகிறீர்கள்?). ”
முதல் மனிதர் : "ஐயா, ஆப்னே 5 லட்சம் போலா தா, ஜனாப் (ஐயா, நீங்கள் 5 லட்சம் குறிப்பிட்டிருந்தீர்கள்)." மற்றவர் : "திக் ஹை, லே ஆ (சரி, கொண்டு வாருங்கள்)."
முன்னதாக, வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணை பிரிவைச் சேர்ந்த எஸ்.பி. ஷாலினி அக்னிஹோத்ரி தி இந்தியன் எக்ஸ்பிரஸுடன் பேசுகையில் , ஆடியோ கிளிப்பின் உள்ளடக்கங்கள் “தகுந்த ஆதாரங்கள் மூலம்” நீருபிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
பிப்ரவரி முதல் பல்வேறு மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்குயதில் ஊழல் நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
பல மணிநேர விசாரணைக்கு பின்னர் குப்தா கைது செய்யப்பட்டதாக ஏ.டி.ஜி அனுராக் கார்க் தெரிவித்தார். குப்தாவின் மொபைல் போன் மற்றும் குரல் மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்காக ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன," என்றும் அவர் தெரிவித்தார்.
"நீரிழிவு மற்றும் அசாதாரண இரத்த அழுத்தம்" காரணமாக குப்தா கைது செய்யப்பட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின், கடந்த செவ்வாய்க்கிழமை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.