வெகுநாட்களாகப் பிரிந்திருந்தவர்களான உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் சனிக்கிழமை அன்று மும்பையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மேடையைப் பகிர்ந்துகொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, "இந்தி திணிப்பைத் தோற்கடிக்க" அவர்களின் இந்த இணைவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
அந்தப் பொதுக்கூட்டத்தில், சிவசேனா (உத்தவ் பால்தாக்கரே பிரிவு) தலைவரும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்.என்.எஸ்) தலைவரும், மகாராஷ்டிராவில் தொடக்கப் பள்ளிகளில் இந்தியை 3-வது மொழியாக அறிமுகப்படுத்தும் விதமாக, தற்போது ரத்து செய்யப்பட்ட, பாஜக தலைமையிலான மகாயுதி அரசின் முடிவை கடுமையாகத் தாக்கிப் பேசினர்.
இந்த நிலைப்பாட்டை வரவேற்று, முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது, "இந்தி திணிப்பைத் தோற்கடிக்க தி.மு.க, தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திய மொழி உரிமைப் போராட்டம், இப்போது மாநில எல்லைகளைத் தாண்டி மகாராஷ்டிராவில் போராட்டப் புயலாகச் சுழன்றடிக்கிறது."
"இந்தி திணிப்புக்கு எதிராக, இன்று மும்பையில் சகோதரர் உத்தவ்தாக்கரே தலைமையில் நடந்த வெற்றிக் கூட்டத்தின் உற்சாகமும், ஆற்றல் மிக்க சொற்பொழிவும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது" என்றார்.
"சட்டவிரோதமாகவும், அராஜகமாகவும்" செயல்படுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். "தமிழ்நாடு பள்ளிகளில் இந்தி 3-வது மொழியாகக் கற்பிக்கப்பட்டால் மட்டுமே நிதி ஒதுக்கப்படும் என்று கூறி சட்டவிரோதம், அராஜகமாகவும் செயல்படும் பாஜக, ஆளும் மகாராஷ்டிராவில் மக்களின் கிளர்ச்சிக்கு அஞ்சி 2-வது முறையாகப் பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது," என்று ஸ்டாலின் கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.
அந்நிகழ்வில் ராஜ் தாக்கரேயின் உரையை மேற்கோள் காட்டி, "இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை முழுநேரமும் ஊக்குவிப்பதை முன்னுரிமையாகக் கொண்ட மத்திய அரசுக்கு, ராஜ்தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். 'உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கற்பிக்கப்படும் 3-வது மொழி எது? இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கியுள்ளன. முன்னேற்றப் பாதையில் உள்ள இந்தி அல்லாத மாநிலங்களின் மக்கள் மீது இந்தியை ஏன் திணிக்கிறீர்கள்? என்று கேள்வி ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (சமக்ரா சிக்ஷா அபியான்) கீழ் ரூ.2,152 கோடி நிதியை வெளியிடுவதற்கான மத்திய அரசின் "பழிவாங்கும் நிலைப்பாட்டை மாற்றுமா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை மும்மொழிக் கொள்கையின் போர்வையில் திணிக்கும் புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கிடைக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களை விளக்கிய ஸ்டாலின், மாநில மக்களின் நிலைப்பாடு "இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தைப் பாதுகாப்பது" தொடர்பானது என்றும், அது "வெறுப்பால் உந்தப்பட்டது" அல்ல என்றும் குறிப்பிட்டார்.
"இந்தி திணிப்பால் அழிக்கப்பட்ட ஏராளமான இந்திய மொழிகளின் வரலாற்றை அறியாமல், இந்தியாவை இந்தி நாடாக மாற்றும் திட்டத்தைப் புரிந்து கொள்ளத் தவறிய சில அப்பாவி நபர்கள் இங்கே 'இந்தி கற்றுக்கொண்டால் வேலை கிடைக்கும்' போன்ற சொற்றொடர்களைப் பேசுகிறார்கள். அவர்கள் இப்போது சீர்திருத்தப்பட வேண்டும். மகாராஷ்டிராவில் ஏற்பட்ட எழுச்சி அவர்களின் ஞானக் கண்களைத் திறக்கும்," என்று ஸ்டாலின் எழுதினார்.
பாஜகவுக்கு எச்சரிக்கையாக, ஸ்டாலின் கூறினார்: "பாஜக தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் இழைத்த துரோகத்திற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். இல்லையெனில், தமிழ்நாடு மீண்டும் பாஜகவுக்கும் அதன் புதிய கூட்டாளிகளுக்கும் மறக்க முடியாத ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்!"
தாக்கரே சகோதரர்களின் "வெற்றிப் பேரணி" ஆயிரக்கணக்கானோரை ஈர்த்தது, மேலும் 2 அரசாங்கத் தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது நடந்தது. 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு இந்தியை கட்டாயமாக்குவது, மற்றொன்று அதை விருப்பமாக்குவது இதை சிவசேனா (உத்தவ் பால்தாக்கரே பிரிவு) மற்றும் எம்என்எஸ் ஆகியவை மொழியின் "திணிப்பு" என்று அழைத்தன. கூட்டத்தில் உரையாற்றிய ராஜ், பாஜக மூன்று மொழி சூத்திரத்தை கல்வி சீர்திருத்தத்திற்குப் பதிலாக "அரசியல் கருவியாக" பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.
"அவர்கள் தேவையில்லாமல் (இந்தியை) எங்கள் மீது திணிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மகாராஷ்டிராவின் மற்றும் மராத்தி மக்களின் சக்தியைக் கண்டனர். அதனால்தான் அவர்கள் ஜிஆர்-களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது," என்று ராஜ் கூறினார். "சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பாஜகவுக்கு அதிகாரம் இருக்கலாம், ஆனால் தாக்கரேக்களுக்கு தெருக்களில் அதிகாரம் உள்ளது, அதை அவர்கள் இப்போது கண்டனர்."
ராஜின் உணர்வுகளை மீண்டும் வலியுறுத்தி, உத்தவ்வும் பாஜக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரைத் தாக்கினார், அவர்களைப் பிளவுபடுத்தும் தந்திரங்களைப் பயன்படுத்துவதாகவும், மகாராஷ்டிராவின் நலன்களுக்குத் துரோகம் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
"மும்பை மராத்தி மக்களின் ரத்தத்தால் சம்பாதிக்கப்பட்டது. இப்போது, சிலர் (பாஜகவில்) 'நாங்களும் மராத்தியர்கள் இல்லையா?' என்று கூறுகிறார்கள். நீங்கள் பெயரால் மட்டுமே மராத்தி உறுதிப்படுத்த உங்கள் ரத்தத்தைப் பரிசோதிக்க வேண்டியிருக்கலாம்," என்று உத்தவ் கூறினார், பாஜக மகாராஷ்டிராவின் உண்மையான போராட்டங்களில் ஒருபோதும் இல்லை என்று கூறிக்கொண்டார்.