இந்து மதக் கடவுளாக போற்றப்படும் அனுமன் பிறந்த இடம் குறித்த சர்ச்சை, தற்போது பூதாகரமெடுக்க தொடங்கியுள்ளது. கர்நாடகாவும் ஆந்திராவும் தங்கள் மாநில எல்லைக்கு உள்பட்ட பகுதியிலேயே அனுமனின் பிறப்பிடம் அமைந்திருப்பதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
கர்நாடக மாநிலத்தின் சிவமோகாவைச் சேர்ந்த இந்து மதத் தலைவர்களில் ஒருவர், அனுமன் உத்தர கர்நாடகா மாவட்டத்தில் உள்ள கோகர்ணா மாவட்டத்தில் பிறந்ததாக கூறுகிறார். இந்நிலையில், கிஷ்கிந்தாவில் உள்ள அஞ்சநாத்ரி மலையை அனுமனின் பிறப்பிடமாக கர்நாடகா முன்னர் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவை தொடர்ந்து, ஆந்திராவும் அனுமனின் பிறப்பிடம் குறித்து கருத்து தெரிவித்து வருகிறது. அனுமனின் பிறப்பிடம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழு மலைகளில் ஒன்றான அஞ்சநாத்ரி என கூறி வருகிறது.
இந்நிலையில், சிவமோகாவில் அமைந்துள்ள ராமச்சந்திரா மடத்தின் தலைவரான ராகவேஸ்வர பாரதி, அனுமனின் பிறப்பிடம் குறித்த சர்ச்சையில், ராமாயணத்தை மேற்கோள் காட்டுகிறார். ராமாயணத்தின் அடிப்படையில், கர்நாடகாவின் கோகர்ணாவில் அனுமன் பிறந்ததார் என்றும், கிஷ்கிந்தாவில் உள்ள அஞ்சநாத்ரியை அவரது கர்ம்பூமியாகவும் குறிப்பிடுகிறார்.
இதனிடையே, அனுமனின் பிறப்பிடம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானம், தொல்லியல் நிபுணர்கள், வேத அறிஞர்கள் மற்றும் ஒரு இஸ்ரோ விஞ்ஞானி அடங்கிய குழு ஒன்றை உருவாக்கியது. அந்த குழு, தனது இறுதிக்கட்ட ஆய்வறிக்கையை வருகின்ற ஏப்ரல் 22-ம் தேதி சமர்பிக்க உள்ளது. திருப்பதியின் அஞ்சநாத்ரியில் அனுமன் பிறந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கிஷ்கிந்தாவின் அஞ்சநாத்ரி மலையை அனுமனின் பிறப்பிடமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பணியில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது. கிஷ்கிந்தா மலைகள் ராமாயணத்தில் குறிப்பிடப்படுவதை அடிப்படையாக கொண்டு, அஞ்சநாத்ரியை புனித யாத்திரை தளமாகவும் கர்நாடகா அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)