”பள்ளிகளில் கிறிஸ்மஸ் கொண்டாடினால் போராட்டம் நடத்துவோம்”: இந்துத்துவ அமைப்பு கடும் எதிர்ப்பு

பள்ளிகளில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடக்கூடாது எனவும், மீறி கொண்டாடினால் பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் இந்துத்துவ அமைப்பு எச்சரித்துள்ளது.

Children dressed in Santa costumes participate in Christmas celebrations at a school in Chandigarh, India, December 24, 2016. REUTERS/Ajay Verma

உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளிகளில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடக்கூடாது எனவும், மீறி கொண்டாடினால் பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் இந்துத்துவ அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பல பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி, ஆடல், பாடல் என கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படும்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அலிகரில், பள்ளிகளில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால், இந்து மாணவர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என இந்து ஜாக்ரன் மஞ்ச் என்ற இந்துத்துவ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பள்ளிகளில் பெரும்பான்மையாக உள்ள இந்து மாணவர்களின் மனநிலை, கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டத்தால் மாறிவிடுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இதுதொடர்பாக, அந்த அமைப்பு நேற்று (திங்கள் கிழமை) அலிகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ பள்ளிகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “பள்ளிகளில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடக்கூடாது. மீறி கொண்டாடினால் பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்தப்படும்”, என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, இந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் அலிகர் மாவட்ட தலைவர் சோனு சவிதா கூறுகையில், “மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடினால், அதன்மூலம் மாணவர்கள் கிறிஸ்துவத்திற்கு மிக எளிமையாக கவரப்படுகின்றனர்.”, என கூறியுள்ளார்.

இங்கிரஹாம் கல்வி நிறுவன இயக்குநர் எஸ்.என்.சிங் என்பவர் தெரிவிக்கும்போது, “எந்தவொரு பள்ளியும் குறிப்பிட்ட பண்டிகையை கொண்டாடுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துவதில்லை”, என கூறினார். அதனால், மாவட்ட நிர்வாகத்தை அனுகி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டத்தின்போது காவல் துறை பாதுகாப்பு கோர சில பள்ளிகள் முடிவெடுத்துள்ளன.

அலிகர் மாவட்ட மாஜிஸ்திரேட் ரிஷிகேஷ் பாஸ்கர் யசோதா, ”இதுகுறித்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு எதிராக யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.”, என கூறியுள்ளார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hindu group warns schools against celebrating christmas calls it step towards forced conversion

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com