1949ம் ஆண்டு மகாத்மா காந்தியை கொலை செய்த ஹரியானா மாநிலம் அம்பாலா மத்திய சிறையில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணைக் கொண்டு நாதுராம் கோட்சேவின் சிலையை உருவாக்கப் போவதாக இந்து மகாசபா கூறியுள்ளது.
வலதுசாரி அமைப்பின் இந்த கருத்துக்கள் திங்களன்று கோட்சேவின் நினைவு தினத்தை அனுசரித்த போது வெளிவந்தன.
“மகாசபா செயல்பாட்டாளர்கள் கடந்த வாரம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே தூக்கிலிடப்பட்ட அம்பாலா சிறையில் இருந்து மண்ணைக் கொண்டு வந்தனர். கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோரின் சிலைகளை உருவாக்க அந்த மண் பயன்படுத்தப்படும். மேலும், அவை குவாலியரில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் நிறுவப்படும்” என்று அந்த அமைப்பின் தேசிய துணைத் தலைவர் டாக்டர் ஜெய்வீர் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், அவர், “இந்து மகாசபா செயல்பாட்டாளர்கள் உத்தரப் பிரதேசம் மீரட்டில் 'பாலிதான் தாம்' என்ற இடத்தில் கோட்சே மற்றும் ஆப்தே ஆகியோரின் சிலைகளை திங்கள்கிழமை நிறுவினார்கள். நாங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற பலிதான் தாம்-ஐ கட்டுவோம்” அவர் கூறினார்.
குவாலியர் மாவட்ட நிர்வாகம் 2017ம் ஆண்டு கோட்சேவின் மார்பளவு சிலையை (அங்குள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் நிறுவப்பட்டது) கைப்பற்றியதாகவும், ஆனால், அந்த சிலை இதுவரை திருப்பித் தரப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், நாட்டின் பிரிவினைக்கும் (1947ல்) பெரிய அளவில் மக்கள் கொல்லப்பட்டதற்கும் காங்கிரஸ் தான் காரணம் என்று பரத்வாஜ் குற்றம் சாட்டினார்.
இதனிடையே, குவாலியரின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சத்யேந்திர சிங் தோமர் திங்கள்கிழமை இங்கே இந்து மகாசபையின் பொது நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை என்று கூறினார். மேலும், இங்கே இதுவரை சிலை எதுவும் நிறுவப்படவில்லை என்றும் அந்த அமைப்பின் செயல்பாடுகளை போலீசார் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"