நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அரசும் அரசியல்வாதிகளும் இதனைக் கடைப்பிடித்தபோது, உத்திரபிரதேச இந்து மகாசபையினர் மட்டும் காந்தியின் உருவ பொம்மை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும் எரித்தும் கோட்சேவுக்கு மரியாதை செலுத்தினர்.
இதை முன்னின்று நடத்தியதோடு, துப்பாக்கியால் காந்தியின் உருவத்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்து மகா சபையின் தலைவர் பூஜா ஷகுன் பாண்டேவின் செயலை பலரும் கண்டித்தனர். அதோடு அவர் காந்தியை சுடும் அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் எரிச்சலடையச் செய்தது.
பின்னர் பேட்டியளித்த பூஜா, “தசரா பண்டிகையின் போது ராவணனின் தலையை வெட்டி வீசுவது போல, இனி ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்ச்சியை நடத்துவோம்” என்றார்.
இந்நிலையில் தற்போது இந்து மகாசபையின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனை ’கேரள சைபர் வாரியர்’ எனும் குழு முடக்கியுள்ளது. அகில இந்திய இந்து மகாசபையின் இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் ’இந்து மகாசபை வீழ்ந்து விட்டது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள் ஹேக்கர்கள். அதன் கீழ் பூஜா ஷகுன் துப்பாக்கியால் காந்தியை சுடும் படமும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ”உலகளாவிய பாதையை சரியான முறையில் பின்பற்ற காந்திஜி தூண்டுகோலாக இருந்தார். அவரது அனைத்து செயல்களிலும் அகிம்சையைப் பின்பற்றி வந்தார்” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்கள் ஹேக்கர்கள்.
அரசாங்கம் இவரை உடனே கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள ஹேக்கர்கள், மூளையைக் குறைப்பதற்கு பதில் உங்கள் எடையைக் குறையுங்கள் எனவும் பூஜாவை அறிவுறுத்தியுள்ளானர்.
இந்த வீடியோ வெளியான பின்னர் அகில இந்திய இந்து மகாசபைக்கு விரைந்த போலீஸ் குழு, அங்கிருந்த இருவரை காவலில் எடுத்தது. பூஜா மற்றும் அடையாளம் தெரியாத நால்வர் மீது காந்தி பார்க் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.