திங்களன்று அகர்தலாவில் உள்ள வங்கதேசத்தின் துணை தூதரகம் மீது நடத்தப்பட்ட பாதுகாப்பு அத்துமீறலுக்காக வங்காளதேச அரசாங்கத்தால் பெயரிடப்பட்ட அமைப்பான, இந்து சங்கர்ஷ் சமிதி (HSS), வங்கதேசத்தில் ஒரு இந்து துறவி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்துக்கள் மீது நடத்தப்படும் அட்டூழியங்களுக்கு எதிராக "மக்களை ஒன்றிணைக்கும்" குறிக்கோளுடன் ஒரு வாரத்திற்கு முன்பு உருவாக்கப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: Hindu outfit behind attack on Bangladesh mission in Tripura is just over a week old, similar ones spring up
இந்து சங்கர்ஷ் சமிதி தலைவர் சங்கர் ராய், சமிதியை இந்துத்துவா குழுக்களைப் போன்ற அமைப்பாகவும், "ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற ஒத்த எண்ணம் கொண்ட சமூக மன்றங்கள்" என்றும் விவரிக்கிறார். கடந்த ஒரு வாரமாக நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சங்கர் ராய் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
பங்களாதேஷ் துணை தூதரகத்தில் நடந்த சம்பவத்தில், இந்து சங்கர்ஷ் சமிதி உறுப்பினர்கள் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், பங்களாதேஷ் கொடியை அகற்றியதாகவும் கூறப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஏழு பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் வங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான "அட்டூழியங்களுக்கு" எதிராக நடத்தப்படும் இதேபோன்ற போராட்டங்களில் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்- இணைந்த அமைப்புகளான வி.எச்.பி மற்றும் பஜ்ரங்தள் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங் தள் நிர்வாகிகள் ஹெச்.எஸ்.எஸ் உடனான தொடர்பை மறுக்கவில்லை, ஆனால் வங்காளதேச தூதரகம் மீதான தாக்குதலில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறினார்.
பங்களாதேஷ்-க்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அங்கு உரையாற்றிய மூத்த வி.எச்.பி தலைவர் பூர்ண சந்திர மண்டல், இந்துக்களுக்கு எதிரான பகைமையை நிறுத்துமாறு பங்களாதேஷுக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதை உறுதி செய்ய மட்டுமே ஹெச்.எஸ்.எஸ் விரும்புவதாகவும், இந்து துறவி கிருஷ்ண தாஸ் சின்மோயை உடனடியாக விடுவிக்கக் கோருவதாகவும் கூறினார்.
திங்களன்று துணை தூதரக அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பாணையை சமர்ப்பிக்க ஹெச்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாக மண்டல் கூறினார். அதைத் தொடர்ந்து நடந்த வன்முறை குறித்து மண்டல் கூறியதாவது: “பெரும்பாலான மக்கள் கூடியிருந்தனர், எல்லோரும் ஒருவரையொருவர் அறிந்திருக்க மாட்டார்கள் என்பது இயற்கையானது. நான் எனது உரையை மட்டுமே செய்தேன், என்ன நடந்தது என்று பார்க்கவில்லை.
இந்த வன்முறைக்கு வருத்தம் தெரிவித்த மண்டல், "வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு எதிரான பொதுமக்களின் வேதனையின் பிரதிபலிப்பாக இதை உணர்கிறேன்" என்றார்.
மேற்கு வங்காளம், ஒடிசா, சிக்கிம் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை உள்ளடக்கிய பஜ்ரங் தளத்தின் 'க்ஷேத்ர சன்யோஜக்' அமைப்பின் அமோல் சக்ரவர்த்தி, இந்துக்கள் "ஒன்றுபட்டு வங்கதேசத்தை ஜனநாயகத்திற்குத் திரும்ப அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றார்.
பா.ஜ.க திரிபுரா துணைத் தலைவர் சுபால் பௌமிக் கூறுகையில், வங்காளதேச தூதரகத்தில் நடந்தது "சிறிய சம்பவம்", இருப்பினும் வன்முறையைத் தவிர்த்திருக்கலாம். “துணைத் தூதரக வளாகத்திற்குள் நுழைந்த இளைஞர்கள் யாரையும் காயப்படுத்தவில்லை. கொடியை மட்டும் அகற்றிவிட்டு திரும்பி வந்தனர். வங்கதேசத்தில் மூவர்ணக் கொடி மீண்டும் மீண்டும் அவமதிக்கப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பதிலாக, பாதுகாப்பு மீறலை பெரிய பிரச்சினையாக முன்னிறுத்துகின்றனர்,'' என்றார்.
அஸ்ஸாமின் பராக் பள்ளத்தாக்கில் அதே பிரச்சினைகளில் செயல்படும் 'சனாதனி ஐக்யா மஞ்சா' போன்ற ஹெச்.எஸ்.எஸ் போன்ற "ஒத்த" அமைப்புகளைப் பற்றியும் வி.ஹெச்.பி அமைப்பின் மண்டல் பேசினார். "பெயர்கள் வேறுபட்டவை, ஆனால் நிறுவனங்கள் ஒரே நோக்கத்துடன் நடைமுறைக்கு வந்துள்ளன," என்று மணடல் கூறினார், மேலும், ஹெச்.எஸ்.எஸ் அதன் எதிர்ப்புகளைத் தொடரும் என்றும், தேவைப்பட்டால், உணவு வழங்கல் மற்றும் அதற்கு நிவாரண பொருட்கள் வழங்குவது உட்பட வங்கதேசத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்குமாறு இந்தியாவை வலியுறுத்தும் என்றும் மண்டல் கூறினார்.
“வங்காளதேசத்தில் என்ன நடந்தாலும், அது முன்பு ஷேக் ஹசீனா ஆட்சியின் போதும் அல்லது இப்போதைய ஆட்சியின் போதும் இந்துக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சதியும் அட்டூழியங்களும் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் சுதந்திரம் பெற உதவினோம். அவர்கள் மாறவில்லை என்றால், வங்கதேசத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று மண்டல் கூறினார்.
'வேதிக் பிராமண சமாஜ்', 'ஜாகோ ஹிந்து ஜாகோ' மற்றும் 'சனாதனி யுவா' எனப்படும் பிற அமைப்புகளும் அகர்தலா மற்றும் வங்கதேச எல்லைக்கு அருகில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. புதன்கிழமை நடைபெற்ற சனாதானி யுவா போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரதிமா பௌமிக். ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய பிரதிமா பெளமிக், வங்கதேசத்தில் நடக்கும் "காட்டுமிராண்டித்தனத்தை" கடுமையாக சாடினார். "சனாதனி சிறுபான்மையினரின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன, வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகின்றனர், அவர்களின் மகள்கள் கூட்டுப் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்... இதற்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்,” என்று பிரதிமா பௌமிக் கூறினார்.
சி.பி.ஐ (எம்) திரிபுரா மாநில செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஜிதேந்திர சவுத்ரி கூறுகையில், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான "அட்டூழியங்களை" தனது கட்சி கண்டிக்கும் அதே வேளையில், எந்தவொரு போராட்டமும் "ஜனநாயகமாக" இருக்க வேண்டும். வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான அப்பட்டமான அட்டூழியங்களை நாங்கள் மட்டுமல்ல, அனைத்து ஜனநாயக மக்களும் எதிர்க்கின்றனர். எவ்வாறாயினும், நமது எதிர்ப்புகள் ஜனநாயகமாகவும், நாட்டின் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களின்படியும் இருக்க வேண்டும்,” என்று ஜிதேந்திர சவுத்ரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
வன்முறைக்கு எதிர்வினையாக, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்: “வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான பரவலான அட்டூழியங்களுக்கு எதிராக காந்தி சிலை அருகே சிலர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் வங்கதேச துணை தூதரக அலுவலகத்திற்குள் சில இளைஞர்கள் திடீரென நுழைய முயன்றனர். இந்த சம்பவத்தை கண்டிக்கிறேன். அமைதியான எதிர்ப்பு தொடரலாம் ஆனால் இந்த வகையான நடவடிக்கைகள் முற்றிலும் விரும்பத்தகாதவை.”
மேற்கு வங்காளத்திலும், வங்காளதேசத்திற்கு எதிரான போராட்டங்களில் இந்து உரிமைகளை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறும் எச்.எஸ்.எஸ் போன்ற அரசியல் சார்பற்ற "புதிய" அமைப்புகளும் உள்ளடங்குவதாகவும், ஆர்.ஜி கர் மருத்துவமனையில் பலாத்கார கொலையை அடுத்து மாநிலத்தில் பரவலான போராட்டங்களை நடத்திய அமைப்புகளைப் போன்றே இருப்பதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள்.
இந்த வார தொடக்கத்தில், பங்களாதேஷ் எல்லையில் ‘சனாதனி ஓகியோ பரிஷத்’ என்ற அமைப்பு நடத்திய போராட்டங்களில், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உட்பட பல பா.ஜ.க தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். இந்து ஜாக்ரன் மஞ்ச் மற்றும் ‘இந்து சன்ஹதி மஞ்ச்’ ஆகிய அமைப்புகளும் இந்த விவகாரம் தொடர்பாக மாநிலத்தில் பேரணிகளை நடத்தின.
புதன்கிழமை, துறவிகளின் அமைப்பானன பாரத் சேவாஷ்ரம் சங்கம், கொல்கத்தாவில் உள்ள பங்களாதேஷ் துணை தூதரகத்தை ஒரு குறிப்பாணையுடன் அணுகியது. அதன் பெல்டாங்கா பிரிவின் தலைவர் கார்த்திக் மகாராஜ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்:
“வங்காளதேசத்தில் என்ன நடக்கிறது… அதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது. உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பங்களாதேஷ் துணைத் தூதரிடம் முறையிட்டுள்ளோம், மேலும் வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்துக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினோம். நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்,'' என்றார்.
புதன்கிழமை, அகில பாரதிய இந்து மகாசபா மேற்கு வங்காளத்திற்கு வருகை தரும் பங்களாதேஷ் முஸ்லிம்களைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்தது. அதன் மேற்கு வங்கத் தலைவர் சந்திரச்சூர் கோஸ்வாமி, இந்தியக் கொடியை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றத்திற்காக அந்நாடு மன்னிப்புக் கேட்கும் வரை, வங்கதேச குடிமக்களுக்கான சேவைகள் மற்றும் தங்குமிடங்களை இந்தியர்கள் மறுக்க வேண்டும் என்றார்.
மேற்கு வங்கத்தில் உள்ள மூத்த ஆர்.எஸ்.எஸ் பிரசாரக் ஒருவர் கூறியதாவது: “பொதுவாக இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதில்லை, அதனால் மற்ற சமூகத்தினர் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இப்போது நிலைமை வேறுபட்டது, வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு எதிராக நாம் சாலைகளில் இறங்க வேண்டும் என்பதை ஒவ்வொரு இந்துவும் உணர்ந்து கொள்கிறார்கள்.”
இதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அவர்களில் சிலர் பா.ஜ.க அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருக்கலாம். அது குற்றமில்லை” என்றார்.
இந்துக்களை "தூண்டுதல்" மூலம் நிலைமையை "வகுப்பு மயமாக்க" பா.ஜ.க முயற்சிப்பதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ் கூறுகையில், வங்கதேசத்தில் நடப்பதை ஏற்க முடியாது. இதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு நமது முதல்வர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார். பா.ஜ.க ஏன் இங்கு பேரணி நடத்துகிறது? அவர்கள் மத்திய அரசை அணுக வேண்டும்... வாக்குகளுக்காக இந்துக்களை தூண்டிவிடவே பா.ஜ.க முயற்சிக்கிறது, என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.