Hindu Saints Stage Protest in Delhi : சனாதன தர்மம் விவகாரத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக திங்கள்கிழமை (செப்.25) ஏராளமான இந்து துறவிகள் டெல்லி தமிழ்நாடு பவன் அருகே போராட்டம் நடத்தி அவரது உருவபொம்மையை எரித்தனர்.
அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் போராட்டத்துக்கு டெல்லி சந்த் மகாமண்டல் அமைப்பு தலைமை தாங்கியது.
தொடர்ந்து இவர்கள் ரோஜினி நகரில் உள்ள கோவிலில் இருந்து தமிழ்நாடு பவன் நோக்கி பேரணியாக சென்றனர். இந்நிலையில், இவர்களை ஆப்பிரிக்கா அவென்யூவில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த நிலையில், உதயநிதி உள்ளிட்ட சனாதன எதிர்பாளர்களின் உருவ பொம்மைகளை துறவிகள் எரித்தனர். மேலும், சனாதன தர்மத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இழிவான கருத்துகள் வெளியிடுவதை தடுக்க வேண்டும்; தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் துறவிகள் வலியுறுத்தினர்.
இது குறித்து, டெல்லி சந்த் மகாமண்டல் தலைவர் நாராயண் கிரி மகராஜ் கூறுகையில், “இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் மவுனம் காப்பது ஆச்சரியம் அளிக்கிறது” என்றார்.
தொடர்ந்து, “சனாதன தர்மத்திற்கு எதிரான அரசியல்வாதிகளின் வெறுப்புப் பேச்சுகளை உச்ச நீதிமன்றம் கூட கவனத்தில் கொண்டுள்ளது. சனாதன தர்மத்திற்கு எதிராக அரசியல்வாதிகள் பயன்படுத்தும் மொழி சமூகங்களுக்குள் விரோதத்தை உருவாக்குகிறது, அத்தகைய அரசியல் தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், தமிழக அரசின் அமைச்சருமான உதயநிதி, சமீபத்தில் சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு பேசினார்.
மேலும் சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது என்று கூறி அதை ஒழிக்க வேண்டும் என்றும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“