சர்ச்சை பேச்சு விவகாரம்: கமலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த டெல்லி ஐகோர்ட்

அஸ்வினி உபாத்யா, கமல்ஹாசனின் தேர்தல் பரப்புரைக்கு தடைக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

Hindu terror remark, delhi high court suspended petition against MNM chief kamalhaasan - சர்ச்சை பேச்சு விவகாரம்: கமலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த டெல்லி ஐகோர்ட்

‘இந்து தீவிரவாதி’ என்ற சர்ச்சை பேச்சு காரணமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கமல் பேசியது என்ன?

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து நடிகரும், அக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது கமல் பேசிய கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர், “தீவிரவாதம் எந்த மதத்தில் இருந்தாலும் அது தவறு தான். இந்து தீவிரவாதி என்று இங்கு முஸ்லீம்கள் கூடியிருக்கிறார்கள் என்பதற்காக சொல்லவில்லை. காந்தி சிலை முன்பு நின்றுகொண்டு கூறுகிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. நான் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன். அவரது கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன்.

மேலும் படிக்க – எந்த ஒரு இந்துவும் தீவிரவாதி அல்ல : கமலுக்கு பிரதமர் மோடி பதிலடி

இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் உள்ள நிறங்கள் அப்படியே உள்ள இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டி சொல்வேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும். தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு” என்றார்.

வழக்கு விசாரணை

கமலின் இந்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கிடையில் பாஜக-வின் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா, கமல்ஹாசனின் தேர்தல் பரப்புரைக்கு தடைக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற விவகாரத்திற்கு எதற்காக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மனுதாரர், இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் பதில் இல்லை. அதன் காரணமாகவே டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக பதில் கூறிய தேர்தல் ஆணையம், கமல்ஹாசன் மீதான புகார் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். அவர் மீதான புகாரை ஆய்வு செய்து வருகிறோம் என்றும் கூறியது.

இதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் வரம்பிற்குள் கமல்ஹாசனுக்கு எதிரான மனுவை விசாரிக்க முடியாது என்று கூறி, அஸ்வினி உபாத்யா தொடர்ந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மனுதாரரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யா, கமலுக்கு எதிரான தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், தனது புகார் மனுவை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் நான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hindu terror remark delhi high court suspended petition against mnm chief kamalhaasan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com