திருப்பதியில் உள்ள பல்வேறு தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக பள்ளிகள், விமான நிலையங்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் போலி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இது அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது, போதைப் பொருள் வழக்கில் கைதான தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் பெயரை குறிப்பிட்டு திருப்பதியில் உள்ள பல்வேறு தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள சில தனியார் ஹோட்டல்களுக்கு நேற்று இரவு ஜாபர் சாதிக் பெயரை குறிப்பிட்டு ஒரு இமெயில் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப்பார்த்த ஹோட்டல்களின் உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு சென்ற போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர்.
ஹோட்டல்களில் தங்கியிருந்த மக்கள் இந்த தகவலை அறிந்து பதறியடித்து வெளியேறினர். பின்னர் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது எனத் தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் இமெயிலை அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“